வேட்டையாடுதலில் வித்தியாசம் காட்டும் பறவை
ஆப்பிரிக்காவில் வாழும் `கருப்பு ஹெரான்’ என்ற பறவை வேட்டையாடுதலில் ஒரு புதுமையான யுக்தியை கையாள்கிறது.;
`கருப்பு எக்ரெட்' என்ற பெயரில் அறியப்படும் இந்தப் பறவை, 42.5 செ.மீ முதல் 66 செ.மீ உயரத்துடன், 270 முதல் 390 கிராம் எடையுடன் இருக்கும். இதன் உடலில் அனைத்து பகுதிகளும் கருப்பு நிறத்திலும், பாதம் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இனப்பெருக்க காலத்தில் இதன் கழுத்து பகுதியில் நீண்ட இறகுகள் வளரும். இவை சூடான், தெனாப்பிரிக்கா, கிரீஸ், இத்தாலி, மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் அதிகளவில் வாழ்கின்றன. நன்னீர் பகுதிகள், குளங்களின் விளிம்புகள், சதுப்பு நிலங்கள், ஆற்றின் ஓரங்கள், வயல் வெளிகள், கடலோர பகுதிகள் போன்றவற்றில் உள்ள ஆழமற்ற பகுதியில் சென்று அவற்றில் உள்ள மீன்களை வேட்டையாடுகின்றன. இவை தரையில் இருந்து 15 மீட்டர் உயரமுள்ள மரங்கள், புதர்கள் அல்லது நாணல் படுக்கைகளில் குச்சிகள் மற்றும் புற்களால் கூடு கட்டுகிறது. 2 முதல் 4 முட்டைகளை இட்டு, ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் 18 முதல் 30 நாட்களுக்கு அடைகாத்து குஞ்சுகளை பொரித்து பராமரிக்கும். இது ஒரு கூட்டமாக வாழும் பறவை, பெரும்பாலும் 50 பறவைகள் வரை மந்தைகளில் காணப்படும்.
கருப்பு ஹெரான் பறவை வேட்டையாடும் போது, தண்ணீரில் தனது இறக்கையை குடை போல விரித்து தலையை இறக்கைக்கு அடியில் வைத்துக் கொள்ளும். இறக்கையின் நிழலினால் ஈர்க்கப்பட்டு பக்கத்தில் வரும் மீன்களைப் பிடித்து உண்ணும். இதன் விருப்பமான உணவு மீன்களும், நீர்வாழ் பூச்சிகளுமே. இந்தப் பறவையில் நீண்ட விரல் நகங்கள் சீப்பு போல இருப்பதால், இறக்கையில் இருந்து அழுக்கு மற்றும் சேறுகளை அகற்ற உதவுகிறது. 1950-ம் ஆண்டில், மடகாஸ்கர் தீவில் உள்ள `அண்டனானரிவோவில்' 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வாழ்ந்தன. இன்று 50 ஜோடிக்கும் குறைவான பறவைகளே உள்ளன. மனிதன் வேட்டையாடுவதன் மூலமும், காடுகளை அழிப்பதன் மூலமும் இப்பறவையின் எண்ணிக்கை குறைந்துள்ளது.