பிக் பென்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையின் வடக்கு பகுதியில் அமைந்த மணிக்கூண்டு, ‘பிக் பென்’.

Update: 2023-07-30 12:43 GMT

சதுரவடிவ அமைப்பைக் கொண்ட இதன் நான்கு பக்கங்களிலும் கடிகாரம் உண்டு. இந்த மணிக்கூண்டு அமைந்த கோபுரம், உலகின் மிகப்பெரிய மூன்று கோபுரங்களில் ஒன்றாகும். பிக் பென் அமைந்துள்ள கோபுரத்திற்கு ஆரம்ப காலத்தில் 'கடிகார கோபுரம்' என்ற பெயர்தான் இருந்தது. 2012-ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் வைர விழாவை குறிக்கும் வகையில் இந்த மணிக்கூண்டு கோபுரத்திற்கு 'எலிசபெத் கோபுரம்' என்று பெயரிடப்பட்டது.

இந்த கோபுரம் அகஸ்டஸ் புகின் என்பவரால் நியோ-கோதிக் பாணியில் வடிவமைக்கப்பட்டது. 1858-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி இந்த மணிக்கூண்டு கோபுரத்தில் கட்டுமானப் பணிகள் முடிவுற்றன. கோபுரம் 316 அடி (96 மீ) உயரம் கொண்டது. தரை மட்டத்தில் இருந்து மணி மண்டபத்திற்குள் ஏறுவதற்கு, 334 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் உள்ளே சிறை அறை உள்ளது. இது 1880-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மணிக்கூண்டு கோபுரத்தில், 1873-ம் ஆண்டு, ஆக்டன் ஸ்மி அயர்டன் என்ற ஆணையரால், ஒரு பெரிய விளக்கு ஒன்று சேர்க்கப்பட்டது. அதனை 'அயர்டன் லைட்' என்கிறார்கள். இந்த விளக்கின் மூலமாக லண்டன் முழுவதையும் பார்க்க முடியுமாம்.

இந்த மணிக்கூண்டில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழும் ஒலியானது, சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும் என்கிறார்கள். லண்டன் நகரில் ஒலி மற்றும் ஒளிபரப்புக்குரிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், சரியான கால அளவு இந்த பிக் பென் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இந்த மணிக்கூண்டை குண்டு வீசி தகர்க்க ஜெர்மணி எவ்வளவோ முயற்சி செய்ததாம். ஆனால் அது கடைசிவரை நடைபெறவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்