பூச்சிகளை உண்ணும் தாவரம்

விலங்குகளில் ஊன் உண்ணி, தாவர உண்ணி, அனைத்துண்ணி ஆகியன உள்ளன. அதைபோல் தாவரங்களிலும் ஊன் உண்ணி வகை உள்ளது.

Update: 2023-05-07 16:30 GMT

இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன. மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி என்னும் பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது. காசி மலையில் அதிகம் காணப்படுவதால் நெப்பந்தசேயி காசியானா என்பது இதன் தாவரவியல் பெயர். இது கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி முதல் 10 ஆயிரம் அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரமிக்க காடுகள், சதுப்பு நிலங்கள், குட்டை ஓரங்களில் நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது. ஒரு அடி உயரம் முதல் 70 அடி உயரம் வரை கொடியாக மரங்களில் தெற்றி, காற்றில் சுற்றித் திரியும் மின்மினி பூச்சி முதல் குழவிகள் வரையிலான பூச்சிகளை பூஜாடி போன்ற தனது பூக்களில் சிக்க வைத்து இது சாப்பிடுகிறது. வண்டு, நத்தை, குழவி என பூச்சிகளை மட்டுமில்லாமல், குட்டி எலியைக்கூட இந்த வகை தாவரங்கள் சாப்பிடுமாம். இவை அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவதற்கு காரணம், உயிர் வாழ்வதற்குத் தேவையான புரதச் சத்துகள், அது வளரும் மண்ணில் குறைவாக இருப்பதுதான்.

பூக்களின் உயரம் 10 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை இருக்கும். பூவின் கழுத்து பகுதியில் மூடி போன்ற இலை, குடுவையை மூடியிருக்கும். பூக்குடுவையில் மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற திரவமும், கழுத்து விளிம்பில் நெக்டார் என்ற சுவையான தேனும் இருக்கும். தேன் வாசமும், பூவின் நிறமும் பட்டாம் பூச்சிகள், வண்டினங்களை கவர்ந்து இழுக்கும். ஆபத்தை உணராத பூச்சியினங்கள், பூவின் விளிம்பில் அமர்ந்து தேனை குடிக்கும் நொடியில், சரசரவென வழுக்கிக்கொண்டு பூவுக்குள் பெப்சின் திரவத்தில் விழும். ஜாடிக்குள்ளிருந்து பூச்சிகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக, மெல்லிய இழை போன்ற சிறுமுடிகள் உட்புறம் சிலிர்த்தெழுந்து நிற்கும். இந்த முடிகள், பூச்சிகள் மேலே எழுந்து வராமல் தடுக்கும். பெப்சின் திரவம் பூச்சியை ஜீரணிக்கக்கூடிய சக்தியைக் கொண்டிருப்பதால், மேலே எழுந்து வருவதற்கான பூச்சிகளின் முயற்சி தோல்வியில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் திரவத்தில் கரைந்து போகும்.

அடைமழை பெய்தாலும் ஒரு சொட்டு நீர்கூட ஜாடிக்குள் விழுந்து பெப்சின் திரவம் நீர்த்து போகாமல் இருக்க, ஜாடி விளிம்பில் உள்ள இலை, மூடி போலச் செயல்படும். பூச்சியுண்ணும் தாவரங்கள் வட இந்தியாவில் மட்டுமே இயற்கையாக இருந்து வருகின்றன. கடந்த 1975-ம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தில் இருந்து ஏற்காடு தாவரவியல் பூங்காவுக்கு 15 நெப்பந்தசேயி செடிகள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒரு செடி 38 ஆண்டுகளாக இப்போதும் இருக்கிறது. அதுபோல் வட அமெரிக்காவில் வீனஸ் ப்ளைட்ராப் வகை தாவரம் உள்ளது. ஈரமான சதுப்பு நிலப் பகுதிகளில் இவை வளர்கின்றன. இவற்றின் இலைகள் 3 செ.மீ. முதல் 12 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. இலைகளின் அடிப்பாகம் பச்சையாகவும் மேல் பாகம் சிவப்பாகவும் இருக்கும். இலையை இரண்டாக மடிக்கும்படி இருக்கும். ஓரங்களில் நீண்ட முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிக்கும். இலையின் நடுப்பகுதியில் ஜீரணச் சுரப்பிகள் கூட உள்ளன.

இப்படி அழகான சிவப்பு இலைகளைப் பார்த்ததும் பூச்சிகள் ஆவலோடு அருகில் வருகின்றன. இலை மீது அமர்ந்தவுடன், பூச்சியைப் பிடிப்பதற்குத் தயாராகிவிடுகிறது. பூச்சி ஊர்ந்து போகும்போது, இலையில் உள்ள உணர் முடிகளிலிருந்து மின் சமிக்ஞைகள் வெளிவந்து, இலையை மூட வைத்துவிடுகின்றன. பூச்சி சுதாரிப்பதற்குள் மிக வேகமாக இலை மூடிவிடும். இலையின் இரு பக்கங்களிலும் உள்ள முட்கள் ஒன்றோடு ஒன்று இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகப் பூச்சியை இறுக்கிக்கொண்டே போனதும், ஒருகட்டத்தில் பூச்சிகள் இறந்து போய்விடுகின்றன. இலையில் உள்ள ஜீரணச் சுரப்பிகளில் இருந்து வெளிவரும் நீர், பூச்சியை மெதுவாக ஜீரணம் செய்துவிடுகிறது. பூச்சியின் உடல் ஜீரணமாவதற்கு 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும். அதுவரை இலை மூடியே இருக்கும். செரிக்கப்படாத பூச்சியின் பாகங்கள் இலை திறந்த பின்னர், வெளியே வந்துவிடும். இலை இறைச்சியை உண்ணுவதில்லை. உடலில் உள்ள நீர்ச் சத்தை மட்டுமே உறிஞ்சிக்கொள்கிறது. ஓர் இலையால் அதிகபட்சம் 3 முறையே பூச்சிகளைப் பிடிக்க முடியும். மூன்றாவது தடவை பூச்சியைப் பிடித்த பிறகு, இலை திறப்பதே இல்லை. சிறிது நாட்களில் இலை பழுத்து, உதிர்ந்துவிடும். பொறியைப் போல இலை செயல்படுவதால் இவற்றுக்கு ப்ளைட்ராப் என்று பெயர். சிலந்தி, ஈக்கள், கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, அட்டை போன்றவை இலைக்குள் வந்தால் உயிர் தப்பி போக முடியாது. குச்சி, கல் போன்ற உயிரற்ற பொருட்கள் இலை மீது விழுந்தாலும், இலை தானாக மூடிக்கொள்ளும். ஆனால் அவற்றை ஜீரணம் செய்ய முடியாமல், 12 மணி நேரங்களுக்குப் பிறகு இலையை விரிக்கும். குறும்புக்காக ஒரு பென்சிலை இலைக்குள் வைத்தாலும் அதை எடுப்பதற்கு 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும். விலங்குகள் இலைகளைச் சாப்பிடாமல் இருப்பதற்காகச் சில தாவரங்கள் முட்களைப் பெற்றுள்ளன. சில தாவரங்கள் மோசமான வாசனையை வெளியிடுகின்றன. அதைபோலத்தான் வீனஸ் ப்ளைட்ராப் செடிகளும் தங்களைத் தாக்க வரும் பூச்சிகளை எதிர்க்க ஆரம்பித்தன. காலப்போக்கில் இந்தப் பண்பு மரபணுவில் பதிந்து, எதிரியை இரையாக மாற்றும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சிப் பெற்றுவிட்டது என்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்