முதுமையை தடுக்கும் உணவு

புரோபயாட்டிக் அதிகமுள்ள புளித்த பால் பொருட்கள், தயிர், சீஸ், வெண்ணெய், குறைந்த லாக்டோஸ் உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், முதுமையைத் தள்ளிப்போடலாம்.

Update: 2023-08-10 13:30 GMT

நோய் எதிர்ப்பு திறன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ரஷ்ய விலங்கியல் நிபுணர் எலீ மெட்ஷ்னிகாப், நோபல் பரிசும் பெற்றவர் 1915-களில் உலகின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்த நிலையில், பல்கேரிய விவசாயிகளின் சராசரி ஆயுட்காலம் மட்டும் 87 ஆண்டுகளாக இருப்பதைக் கவனித்தார். அது மட்டுமல்லாமல், அங்கு ஆயிரம் பேரில் குறைந்தபட்சம் 20 பேர் 100 வயதுக்கு மேல் வாழ்ந்துவந்தனர். அவர்களுடைய உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் வேறுபட்டிருப்பதையும் அவர் அறிந்தார். புரோபயாடிக்குகளால் செறிவூட்டப்பட்ட பால் உள்ளிட்ட புளிக்க வைத்த உணவு பொருட்களை அதிகமாகச் சாப்பிட்டதுதான், அவர்களுடைய நீண்ட ஆயுளுக்குக் காரணம்.

புரோபயாடிக் ஓர் உயிருள்ள நுண்ணுயிரி. ஓர் அற்புத உணவும்கூட. இதைப் போதுமான அளவு உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும். பால் பொருட்கள், புளிக்க வைத்த உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவு வகைகள், மாத்திரை மருந்து, உலர்ந்த வடிவம், வித்துப் படிவங்கள், திரவமாக புரோபயாட்டிக்குகள் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் மாற்று மருத்துவ முறையில்தான் புரோபயாடிக் அதிகம் பரிந்துரைக்கப்பட்டுவந்தது. இப்போது அலோபதி மருத்துவத்திலும் புரோபயாட்டிக் பரிந்துரைக்கப்பட ஆரம்பித்துவிட்டது. ஆரோக்கியத்தை பாதுகாக்க அனைத்து வயதினரும் புரோபயாடிக்கை பயன்படுத்த முடியும். அது வாழ்நாளை நீடிக்கும், வயதான தோற்றத்தை மட்டுப்படுத்தும்.

பொதுவான வயிற்றுப்போக்கு, குடல் எரிச்சல் நோய் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்க புரோபயாட்டிக் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கவும், மட்டுப்படுத்தவும் உதவுகிறது. பெப்டிக் அல்சர், இரைப்பை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைப் புரோபயாட்டிக் தடுக்கிறது. குடல் அழற்சி நோயைத் தடுப்பதிலும், அதன் தீவிரத் தன்மையை குறைத்து நிவாரணம் அளிப்பதிலும் புரோபயாட்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றில் அழற்சி ஏற்பட காரணமாக இருக்கும் சைட்டோகைன்கள் உருவாவதை புரோபயாட்டிக் தடுத்து, இரைப்பையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் குடலில் நோய் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தோல் ஒவ்வாமை, ஜலதோஷம், காய்ச்சல், சளி, ஆஸ்துமா போன்றவற்றை புரோபயாடிக் மூலம் கட்டுப்படுத்த முடியும். திட்டவட்டமான உணவுப் பழக்கத்துடன், புரோபயாட்டிக் அதிகமுள்ள புளித்த பால் பொருட்கள், தயிர், சீஸ், வெண்ணெய், குறைந்த லாக்டோஸ் உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், முதுமையைத் தள்ளிப்போடலாம், ஆயுளையும் நீட்டித்துக் கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்