பேஸ்புக் கணக்கு தொடங்குவதற்காக பொய் சொன்ன 113 வயது மூதாட்டி

அமெரிக்காவில் மின்னசோட்டா பகுதியில் வசிக்கும் 113 வயதான அன்னா ஸ்டோஹர் என்னும் பாட்டி பேஸ்புக் கணக்கு தொடங்குவதற்காக பொய் சொன்னார்.

Update: 2023-07-21 15:52 GMT

சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் கணக்கு ஆரம்பிக்க தன் வயதை கூட்டிச் சொல்லும் சிறுவர்களை பார்த்திருப்போம். ஆனால், தன் வயதைக் குறைத்துச் சொன்ன யாரையாவது பார்த்திருக்கிறீர்களா?

2014-ம் ஆண்டு அமெரிக்காவில் மின்னசோட்டா பகுதியில் வசிக்கும் 113 வயதான அன்னா ஸ்டோஹர் என்னும் பாட்டி இதைச் செய்திருக்கிறார். ஒரு நாள் அன்னா பாட்டிக்கு ஓர் ஆசை வந்தது.2014 அக்டோபர் 12 அன்று தனது 114-வது பிறந்த நாளன்று பல பேர் வாழ்த்துகளைப் பெற வேண்டும் என்பதே அந்த சின்ன ஆசை.

பேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்தால் பல்லாயிரம் பேரின் "ஹாப்பி பர்த்டே" வாழ்த்தைத் தன் வால் போஸ்ட்டில் பார்த்து சந்தோஷப்படலாமே என அவருக்கு தோன்றியது.ஆனால் பேஸ்புக்கைத் திறந்ததும் அன்னா பாட்டிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 13 வயதை எட்டியவர்கள் முதல் 99 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பேஸ்புக்கில் இணைய முடியும் என்பதே அந்தத் தகவல். பிறகு, தனக்கு 99 வயது மட்டுமே ஆகிறது எனப் பதிவு செய்துவிட்டார்.ஆனால் 113 வயது பாட்டிக்கு எப்படி நவீன யுகத்தின் தொழில்நுட்பம் தெரியும்? பேஸ்புக் கலாசாரம் தெரியும்? அன்னா பாட்டியின் மகனுக்கே 85 வயது.

அந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்திருந்த விற்பனையாளர் ஒருவர் ஸ்மார்ட் போன் ஒன்றை அன்னா பாட்டியின் மகனிடம் விற்க, அந்த விற்பனையாளர்தான் பாட்டிக்கு இணையதளம், ஐ பாட், பேஸ்புக்னு பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் பாட்டி சொன்ன பொய் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது எனத் தேடிப்பார்த்தால், அமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சதம் அடித்து, பின்னர் 112 வயதைக் கடந்து வாழும் 223 பேரில் முதியோர்களில் அன்னா பாட்டியும் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார். அதை வைத்து பாட்டி அளித்த பொய்யான வயது அம்பலமானது. இதுபற்றி பாட்டியிடம் அப்போது கேட்டபோது, 99 வயது கடந்தவர்களும் பேஸ்புக்கில் இணைய ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற மாதிரி சமூக வலைத்தளம் மாறவேண்டும் அல்லவா?" என்றாராம்.

Tags:    

மேலும் செய்திகள்