சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
சிங்கப்பூர்,
கனடாவில் நடைபெற்ற பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தமிழக இளம் செஸ் வீரரான குகேஷ் வென்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீன வீரர் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் குகேஷ் விளையாடவுள்ளார்.
இந்த போட்டியை முதலில் இந்தியாவில் உள்ள டெல்லி, சென்னை, குஜராத்தில் நடத்துவதற்கு கேண்டிடேட்ஸ் தொடர் முடிவடைந்த பிறகு உலக செஸ் சம்மேளனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த தொடரை நடத்த விருப்பமுள்ள நாடுகள் விண்ணப்பிக்கலாம் என்றும் உலக செஸ் சம்மேளனம் தெரிவிருந்த நிலையில் பல நாடுகளும் விண்ணப்பம் செய்தன.
இதை தொடர்ந்து தமிழக அரசு இந்த சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்த வேண்டும் என்று நேரடியாக ஒரு விண்ணப்பம் அளித்து விருப்பம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த தொடரை சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசு சார்பிலும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிங்கப்பூரில் இந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.