புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பாட்னா

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, பெங்களூரு புல்சை தோற்கடித்தது.

Update: 2024-10-25 21:20 GMT

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை சந்தித்தது. இதில் தொடக்கத்தில் விரைவாக புள்ளிகளை சேர்த்த தமிழ் தலைவாஸ் ஒரு கட்டத்தில் 18-7 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றிருந்தது. அதன் பின்னர் ரைடில் கலக்கிய பாட்னா அணி தலைவாசை ஆல்-அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 18-23 என்று வெகுவாக நெருங்கியது.

பிற்பாதியில் பாட்னா வீரர் தேவாங்க் ரைடில் பிரமாதப்படுத்தினார். குறிப்பாக 2 முறை 4 புள்ளிகள் எடுத்து ஆட்டத்தின் போக்கை தங்கள் பக்கம் திருப்பினார். முடிவில் பாட்னா அணி 42-40 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. பாட்னா அணியின் தேவாங்க் 25 புள்ளிகள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். தலைவாஸ் அணியில் நரேந்தர் 15 புள்ளிகள் எடுத்தார். 3-வது ஆட்டத்தில் ஆடிய தலைவாஸ் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன் 36-22 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்