ஐ.பி.எல்.: 12 ஆண்டுகளாக தொடரும் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன.;

image courtesy: PTI
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இதில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கடந்த சீசனில் 3 லீக் ஆட்டங்களில் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு ஆட்டத்தில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆட முடியாது. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார்.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 12 ஆண்டுகளாக தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை என்ற மோசமான வரலாறு தொடருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அந்த தொடர் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை? என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மும்பை அணி கடைசியா 2012-ம் ஆண்டு தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்தது. அதன் பின் வெற்றி பெற முடியாமல் போராடி வருகிறது.