கம்பீரை நயவஞ்சகர் என விமர்சித்தது ஏன்..? - மனோஜ் திவாரி விளக்கம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீரை நயவஞ்சகர் என மனோஜ் திவாரி விமர்சித்தார்.;

Update:2025-01-10 22:09 IST

மும்பை,

டிராவிட்டுக்கு பின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற கம்பீரின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இவரது தலைமையில் இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் (0-3) தற்போது பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 10 வருடங்களுக்கு பின் இழந்துள்ளது. இதனால் இவர் மீது பல தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, கம்பீரை நயவஞ்சகர் என கடுமையாக தாக்கி பேசினார். மேலும் கொல்கத்தா அணிக்கு அவர் மட்டும் தனியாக ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுக்கவில்லை எனவும் மனோஜ் திவாரி விமர்சித்தார். இதனால் இவரது கருத்து பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் கம்பீரை நயவஞ்சகர் என விமர்சித்தது ஏன்? என்று மனோஜ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கம்பீரின் செயல்கள் அவருடைய வார்த்தைகளை பொருத்தவில்லை. அவரை நான் ஏன் நயவஞ்சகர் என்று கூறினேன்? ஏனெனில் அவர் கொடுத்த பேட்டிகளை நினைவு கூர்ந்து பாருங்கள். அதில் ஒரு பேட்டியில் அனைத்து வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இந்தியாவுக்கு வந்து பணத்தை மட்டும் சம்பாதிப்பதாக கூறியிருந்தார். எனவே இந்திய அணிக்கு இந்தியர்கள் மட்டுமே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அந்த வாய்ப்பு கிடைத்தபோது அவர் ஏன் அனைத்து துணை பயிற்சியாளர்களையும் இந்தியர்களாக தேர்ந்தெடுக்கவில்லை? ஏன் அவர் ரியான் மற்றும் மோர்னே மோர்கெல் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும் தாம் விரும்பிய வெளிநாட்டு பயிற்சியாளர்களை தற்போது கம்பீர் பெற்றுள்ளார். ஆனாலும் அவரால் வெற்றி முடிவுகளை கொடுக்க முடியவில்லை. அந்த வகையில் அவருடைய செயல்கள் வார்த்தைகளுக்கு பொருத்தமாக இல்லை. அதனாலேயே நயவஞ்சகர் என்று சொன்னேன்.

தற்போது தோல்விகளில் இருந்து கம்பீர் பாடங்களை கற்றுக்கொள்வார். அதிலிருந்து அவர் முன்னேற வேண்டும். அப்போதுதான் அடுத்த தொடரில் இருந்து வெற்றிகள் கிடைக்கும். முதலில் அவர் தலைமை பயிற்சியாளராக எவ்வளவு நாட்கள் தொடர்வார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்