மருத்துவமனையில் பெண்ணுடன் நடனமாடிய வினோத் காம்ப்ளி.. வீடியோ வைரல்
வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி, கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 52 வயதான அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தானேயில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது மூளையில் ரத்தம் உறைந்திருப்பதாகவும் சிறுநீர் தொற்று உள்ளதாகவும் கண்டறியபட்டது. இதனால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையே அவர் சிகிச்சை பெற்று வரும் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் வினோத் காம்ப்ளி உடல் நலம் நல்ல முறையில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் உள்ளவாறு பெண் ஒருவருடன் அவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வினோத் காம்ப்ளி விளையாடிய கால கட்டத்தில் சிறந்த வீரராக போற்றப்பட்டார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் 1983-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
இருப்பினும் பல சர்ச்சைகளில் சிக்கினார். அதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன. குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அவரை, குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு வர, கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதற்கு காம்ப்ளி ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், உடல்நல பாதிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.