ரோகித், விராட் நிச்சயம் அந்த தொடரில் அசத்துவார்கள் - ஆஸி.முன்னாள் வீரர் நம்பிக்கை

ரோகித் சர்மாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.;

Update: 2025-01-03 01:48 GMT

image courtesy: AFP

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்த இந்திய அணி அடுத்து நடந்த பகல்-இரவு டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கிய இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விகளுக்கு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ரன் குவிக்க முடியாமல் திணறியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் ஓய்வு பெற வேண்டும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் தடுமாறினாலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி, ரோகித் சர்மா நிச்சயம் அசத்துவார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்கள் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி, ரோகித் சர்மாவின் தற்போதைய பார்ம் ஒருநாள் கிரிக்கெட்டில் எதிரொலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. துபாயில் அவர்கள் விளையாடும்போது சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். ஒருநாள் போட்டிகள் அவர்கள் இருவரையும் சுதந்திரமாக விளையாட வைக்கும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மாஸ்டர் ஆவார். மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அவர் மாஸ்டர்தான். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அவர் 93 ஸ்ட்ரைக் ரேட்டில் 57 என்ற சராசரியை கொண்டுள்ளார். அதை நீண்ட காலமாக கட்டுப்படுத்துவது வேடிக்கையான விஷயம் என்று நினைக்கிறேன். அதை மீண்டும் நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் பார்க்கக்கூடும்.

2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடியதை மீண்டும் நாம் அந்தத் தொடரில் பார்க்க முடியும். அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தில் இருக்கும்போது எதிரணியிடம் இருந்து போட்டியை எடுத்துக் கொள்வார். அதை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்வது மிகவும் கடினம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மாவால் சமநிலையை கண்டறிய முடியவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அதை விட மாட்டார். எனவே சாம்பியன்ஸ் கோப்பையில் அவர் அசத்தாவிட்டால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. எனவே அவர் நன்றாக விடை பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன்" எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்