விஜய் ஹசாரே டிராபி: ஜெய்ஸ்வாலின் சாதனையை முறியடித்த ஆயுஷ் மத்ரே
விஜய் ஹசாரே தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் மும்பை-நாகலாந்து அணிகள் மோதின.;
அகமதாபாத்,
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து அணி 50 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெகதீஷா சுசித் 104 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் 117 பந்தில் 181 ரன்கள் குவித்த மும்பை அணி வீரர் ஆயுஷ் மத்ரே புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி லிஸ்ட் ஏ தொடரில் இளம் வயதில் 150 ரன்கள் மேல் குவித்த வீரரான ஜெய்ஸ்வாலின் உலக சாதனையை ஆயுஷ் மத்ரே முறியடித்துள்ளார்.ஜெய்ஸ்வால் 17 ஆண்டு 291 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். மத்ரே 17 ஆண்டுகள் 168 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டில் இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.