ரோகித் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்
ரோகித் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.;
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடித்துள்ளது.
கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரோகித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. கடந்த இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களில் இருந்து அவர் சிட்னி போட்டியில் விளையாடப்போவதில்லை எனத் தெரிந்தது. அவருக்கு பதிலாக கில் அணியில் இடம் பெறுவார் என்பதும், பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்பது எதிர்பார்த்தவையே.
இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் (சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்) விளையாடுவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. ஜூன் மாதத்திற்கு முன்பாக இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போவதில்லை. ரோகித் சர்மா அவரது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளார். அவர் மிகவும் சிறந்த வீரர். அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.