பார்டர்-கவாஸ்கர் டிராபி; ரிக்கி பாண்டிங், லட்சுமணன் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-01-03 10:18 GMT

Image Courtesy: AFP 

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடித்துள்ளது.

கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச்சுகளை பிடித்து அசத்தினார். இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஸ்டீஸ் ஸ்மித், ரிக்கி பாண்டிங், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதாவது, பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், வி.வி.எஸ்.லட்சுமணன் (தலா 36 கேட்ச்) சாதனையை ஸ்டீவ் ஸ்மித் (36 * கேட்ச்) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் (46 கேட்ச்) முதல் இடத்தில் உள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியல்:-

1. ராகுல் திராவிட் - (60 இன்னிங்ஸ்)-46

2. ஸ்டீவ் ஸ்மித் - (42 இன்னிங்ஸ்) - 36 *

3. விவிஎஸ் லட்சுமணன் - (54 இன்னிங்ஸ்) -36

4. ரிக்கி பாண்டிங் - (57 இன்னிங்ஸ்)-36

5. விராட் கோலி - (54 இன்னிங்ஸ்) -31*

6. மைக்கேல் கிளார்க் - (43 இன்னிங்ஸ்)-29 

Tags:    

மேலும் செய்திகள்