இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற காரணம் இதுதான் - கம்மின்ஸ் மகிழ்ச்சி
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.;
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது.
இதில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வெறும் 155 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், "உண்மையிலேயே இந்த போட்டி மிகச்சிறப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் மைதானத்திற்கு பெருமளவில் வந்தது உண்மையிலேயே எங்களுக்கு சாதகமாக இருந்தது.
இந்த போட்டியில் ஒவ்வொருவரும் எங்களது வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி. இரண்டாவது இன்னிங்சின்போது லபுஸ்சேன் மிகச்சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து எங்களை மீட்டெடுத்தார். முதல் இன்னிங்சில் ஸ்டீவ் சுமித் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 400 ரன்கள் அடித்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது.
அதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது வீரர்கள் தங்களது முதிர்ச்சியை காண்பித்திருந்தனர். உண்மையிலேயே இந்த போட்டியின் முடிவில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி" என்று கூறினார்.