சாய் சுதர்சன் அபார சதம்.. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா ஏ
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.;
மெக்கே,
இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ அணி 107 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 195 ரன்னும் எடுத்தன.
இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 208 ரன்கள் அடித்திருந்தது. சாய் சுதர்சன் 96 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே படிக்கலின் விக்கெட்டை இழந்தது. 88 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சதத்தை பூர்த்தி செய்த சாய் சுதர்சன் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் இஷன் கிஷன் தவிர மற்ற வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை.
முடிவில் இந்தியா ஏ 2-வது இன்னிங்சில் 312 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா ஏ தரப்பில் பெர்குஸ் ஒ நெய்ல் 4 விக்கெட்டுகளும், மர்பி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் செய்து வருகிறது.