ஸ்டார்க், கம்மின்ஸ் இல்லை... அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர்தான் சிறந்த பவுலர் - ரிக்கி பாண்டிங் பாராட்டு

நீண்ட காலம் விளையாடும் தன்மையை பும்ரா கொண்டிருப்பதாக பாண்டிங் கூறியுள்ளார்.

Update: 2024-08-20 19:27 GMT

image courtesy: ICC

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காயங்களை கடந்து கம்பேக் கொடுத்துள்ள பும்ரா கடந்த 6 வருடங்களாக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலராக அசத்தி வருகிறார் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் அச்சுறுத்தலை கொடுத்து வருவதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் போல நீண்ட காலம் விளையாடும் தன்மையை பும்ரா கொண்டிருப்பதாகவும் பாண்டிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கடந்த 5 - 6 வருடங்களாக பும்ரா சிறந்த ஆல் பார்மட் பவுலர் என்பதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அவர் காயமடைந்ததால் கொஞ்சம் பயம் இருந்தது. அவரால் அதே பழைய அளவுக்கு கம்பேக் கொடுக்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் காயத்திலிருந்து அவர் இன்னும் சிறப்பாக கம்பேக் கொடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். மற்ற வீரர்களிடம் கேட்பதை வைத்தே அவரைப் போன்ற வீரர்களின் உண்மையான அளவீட்டை பெற முடியும். அந்த வகையில் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் அவரைப் பற்றி நீங்கள் பேசும்போது 'பும்ரா நைட்மேர்' என்று சொல்வார்கள்.

அவருக்கு எதிராக விளையாடும்போது என்ன நடக்கும் என்று தெரியாது என பேட்ஸ்மேன்கள் சொல்வார்கள். ஏனெனில் அவருடைய பந்துகள் ஸ்விங் ஆகிறது, வேகமாக செல்கிறது. அவரால் உள்ளேயும் வெளியேயும் வீச முடியும். சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் பார்த்தபோது அவருடைய வேகம், துல்லியம் அப்படியே இருக்கிறது. எதுவும் மாறவில்லை. உண்மையில் அவர் ஒவ்வொரு வருடமும் இன்னும் சிறப்படைகிறார். அப்படி உங்களிடம் திறமை மற்றும் கன்சிஸ்டென்சி இருந்தால் உங்களால் சிறந்த வீரராக வர முடியும். மெக்ராத், ஆண்டர்சன் ஆகியோரை பாருங்கள். அவர்கள் தங்கள் திறமையைப் பிடித்து நீண்ட காலமாக விளையாடியதாலேயே மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக திகழ்கின்றனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்