குல்தீப், பிஷ்னோய் இல்லை.. அஸ்வினுக்கு சரியான மாற்று வீரர் அவர்தான் - ஹர்பஜன் சிங் கணிப்பு
இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கெரியரின் இறுதி கட்டத்தில் உள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 105 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளார்.
மேலும், 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் இதுவரை 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இருப்பினும் தற்போது 38 வயதை எட்டியுள்ள அவர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கான மாற்றுவீரரை தற்போது இந்திய அணி தேர்வு செய்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் மற்றொரு இளம் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரைதான் இந்திய அணி அடுத்த அஸ்வினாக தேர்வு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய டெஸ்ட் அணியில் தற்போது வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்பட்டுள்ளது ஒரு நீண்ட கால வீரர்களுக்கான தேடலின் அடிப்படையில்தான். தற்போது 38 வயதினை எட்டியுள்ள அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.
அதனால் எப்போது அஸ்வின் ஓய்வு பெறுகிறாரோ அப்போது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இடம் பெறுவார் என்று நினைக்கிறேன். அதற்காகவே இந்திய அணி அவரை தயார் செய்து வருகிறது.
தலைமை பயிற்சியாளர் கம்பீரும் மூத்த வீரர்களுக்கான சரியான மாற்றுவீரர்களை கண்டுபிடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சரியான மாற்றுவீராக வாஷிங்டன் சுந்தர் இருப்பார் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.
ஹர்பஜன் கூறுவது போலவே தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் வெளியில் உட்கார வைக்கப்பட்ட நிலையில், சுந்தர் அணியில் இடம்பிடித்து விளையாடினார்.