அடிலெய்டு டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்த பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை - டிராவிஸ் ஹெட்

இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட்போட்டி அடிலெய்டில் நடைபெற உள்ளது.

Update: 2024-12-02 09:07 GMT

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்தியாவை ஒயிட்வாஷ் ஆக்குவோம் என கம்மின்ஸ், லயன் உள்ளிட்ட வீரர்கள் சவால் விடுத்தனர். அவர்களுக்கு இந்தியா முதல் போட்டியிலேயே சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி தாங்கள் எதிர்பாராத நேரத்தில் அடித்து தோல்வியை கொடுத்ததாக டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். எனவே 2வது போட்டியில் பெரிய மாற்றங்களை செய்யாமல் தங்களுடைய அடிப்படை திட்டத்தை பின்பற்றி புத்துணர்ச்சியுடன் விளையாடினாலே இந்தியாவை வீழ்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பந்தை பார்த்து புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்கு தயாராக இருக்கும்போது நான் சிறந்தவன். பும்ராவை இதற்கு முன் சில முறை நான் சந்தித்தது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். தற்போது அவர் கொஞ்சம் அக்ராஸ் பகுதியில் எனக்கு எதிராக வருகிறார். எனவே சமீப காலங்களைப் போல அவரை மீண்டும் நன்றாக எதிர்கொண்டால் போதும்.

முதல் போட்டியில் நாங்கள் சந்தித்த தோல்வி கடின காலங்களில் இருந்து மீண்டு வருவதற்கு தேவைப்படுவதை போன்ற ஒன்றாகும். அதே சமயம் நாங்கள் அந்த போட்டியில் அதிகப்படியாக தோற்கடிக்கப்பட்டோம். எனவே அந்த தோல்விக்கு எது காரணம் என்று உணர்வது எங்களுக்கு மிகவும் எளிது. அதைப் புரிந்து கொண்டு தற்போது நாங்கள் 3 - 4 நாட்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வேலைகளையும் பயிற்சிகளையும் எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். அது மிகப்பெரிய மாற்றமாக இருக்காது. அடுத்த போட்டியில் என்ன சவால்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு கொஞ்சம் எனர்ஜியுடன் நன்றாக விளையாடுவதற்காக முயற்சிக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்