அந்த இந்திய வீரருக்கு எதிராக விளையாடினேன் என்று கூறுவது பெருமையாக இருக்கும் - ஹெட் புகழாரம்

பும்ரா வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக வருவார் என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-02 10:26 GMT

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக வருவார் என்று ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். அவரை தாமும் எதிர்கொண்டேன் என்று தம்முடைய பேரக்குழந்தைகளிடம் பெருமையாக தெரிவிப்பேன் என்றும் ஹெட் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் பும்ரா நம் விளையாட்டில் விளையாடிய மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக செல்வார். அதை நாம் தற்போது கண்டறிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அந்தளவுக்கு அவர் எதிர்கொள்வதற்கு சவாலாக இருக்கிறார். அவருக்கு எதிராக விளையாடுவது நன்றாக இருக்கிறது.

உங்கள் ஓய்விற்கு பிறகு கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது நீங்கள் பும்ராவை எதிர்கொண்டீர்கள் என்று உங்களுடைய பேரக்குழந்தைகளிடம் சொல்வது பெருமையாக இருக்கும். எனவே இந்த தொடரில் அவரை எதிர்கொள்வது மோசமாக இருக்காது. மிகுந்த சவாலை கொடுக்கக் கூடிய அவரை இன்னும் சில முறை எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன்.

பும்ரா மற்ற பவுலர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்கிறார். எனவே அவரை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுடைய வழியை கண்டறிய வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்