லக்னோ அணியின் கேப்டன் யார்? - உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தகவல்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்? என்பதற்கு உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்துக்கு முன்பாக, கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ராகுலை விடுவித்தது. அந்த அணி நிகோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ் (தலா ரூ.11 கோடி), மொசின் கான், ஆயுஷ் பதோனி (தலா ரூ.4 கோடி) ஆகியோரை தக்க வைத்தது.
மேலும், ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி) உள்பட 19 வீரர்களை லக்னோ வாங்கியது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அல்லது நிகோலஸ் பூரன் ஆகியோரில் ஒருவர் அடுத்த சீசனுக்கான லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லக்னோ அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்விக்கு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சில விஷயங்களில் மக்கள் மிக விரைவாக ஆச்சரியப்படுவார்கள். என்னை பொறுத்தமட்டில் நான் ஆச்சரியங்கள் அளிப்பதில்லை. அடுத்த சீசனுக்கான அணியின் கேப்டன் யார் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. கேப்டன் குறித்து நாங்கள் இன்னும் சில நாட்களில் அறிவிப்போம்.
எங்களது மிடில் வரிசையை வலுவானதாக உருவாக்க திட்டமிட்டு செயல்பட்டோம். இருப்பினும் எங்களது திட்டத்துக்கு தகுந்த மாதிரி வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியவில்லை. பட்லரை எடுக்க தீவிரமாக முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம், ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ் ஆகியோரில் இருவர் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால், இது எனது வரம்புக்கு உட்பட்ட விஷயம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.