ஐ.பி.எல்.; சி.எஸ்.கே-வில் ரிஷப் பண்ட்...? - ரெய்னா வெளியிட்ட தகவல்
கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.;
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், சி.எஸ்,கே. முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நான் டெல்லியில் தோனியை சந்தித்தேன். அங்கே ரிஷப் பண்டும் இருந்தார். ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் ஒருவர் மஞ்சள் ஆடையை அணியவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட், தோனிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் சி.எஸ்,கே.அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும், 17 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 128 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையில், டெல்லி அணி 2021 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. கார் விபத்துக்கு பிறகு ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆண்டு விளையாடிய அவர் 13 ஆட்டத்தில் 446 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.