ஐ.பி.எல். மெகா ஏலம்: ரிஷப் பண்ட் எத்தனை கோடிக்கு செல்வார்..? - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
டெல்லி அணியிலிருந்து ரிஷப் பண்ட் கழற்றி விடப்பட்டுள்ளார்.
மும்பை,
ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் அய்யர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்ட் எந்த அணிக்காக வாங்கப்படுவார்? எவ்வளவு தொகைக்கு செல்வார் என்று பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் நிச்சயம் ரூ. 26 கோடி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மெகா ஏலத்தில் என்னை பொறுத்தவரை ரூ.25 முதல் 26 கோடி வரை எளிதாக செல்வார் என்று நினைக்கிறேன். பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளில் ஒன்று அவரை வாங்கும். ஏனெனில் பெங்களூரு அணி தங்களது கைகளில் 83 கோடி ரூபாய் வைத்துள்ளது. அதேபோன்று பஞ்சாப் அணி 110 கோடி ரூபாய் வைத்துள்ளது.
எனவே இவர்கள் இருவரும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பண்டை வாங்குவதற்கு போட்டி போடுவார்கள். இதன் காரணமாக நிச்சயம் அந்த 2 அணிகளும் எளிதாக 20 கோடி ரூபாய்க்கு மேல் ரிஷப் பண்டை வாங்க முன் வருவார்கள். ஒருவேளை இப்படி எந்த அணிக்கு அவர் சென்றாலும் அந்த அணியின் கேப்டனாகவும் மாற வாய்ப்புள்ளது" என்று கூறினார்.