அப்படி அமைந்தால் பாகிஸ்தான் அணியே இந்தியாவை வீழ்த்தும் - வாசிம் அக்ரம் கணிப்பு

சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.

Update: 2024-11-04 08:43 GMT

மெல்போர்ன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

இந்த தோல்விக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியின்போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது பற்றி மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் அக்ரம் விவாதித்தனர்.

அவர்களின் உரையாடல் பின்வருமாறு:-

மைக்கேல் வாகன்: நான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் மோதுவதை பார்க்க விரும்புகிறேன்.

வாசிம் அக்ரம்: அது மிகப்பெரிய தொடராக இருக்கும். அது கிரிக்கெட்டை விரும்பும் இரு நாடுகளுக்கும் நல்லதாக இருக்கும்.

மைக்கேல் வாகன்: ஒருவேளை இப்போது அந்த தொடர் நடைபெற்றால் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடிக்கும்

வாசிம் அக்ரம்: கண்டிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியும். அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணிலேயே நியூசிலாந்தால் 3 - 0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர்களின் உரையாடல் அமைந்தது.

மேலும் செய்திகள்