ஷிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்கள்- இந்திய முன்னாள் வீரர்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது;
மும்பை,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் களமிறக்கியுள்ள இந்திய அணியானது அயர்லாந்துக்கு எதிரான தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் ஷிவம் துபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
ஷிவம் துபே பந்துவீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனை பேட்டராக விளையாட வைக்க வேண்டும் என்பதே சரியான முடிவு. சஞ்சு சாம்சன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதில் அனுபவம் வாய்ந்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். மேலும் சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் இந்தியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.
மேலும் துபேயின் பந்துவீச்சை இந்தியா அதிகம் பயன்படுத்தப் போவதில்லை என்று நினைக்கிறேன்.ஒரு பேட்டாராக அவரை நீங்கள் பயன்படுத்து உள்ளீர்கள் எனில் அவரைவிட சிறந்த பேட்டிங் உக்தியை கொண்டுள்ள சாம்சனை நீங்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். சாம்சனால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட்டும் விளையாட முடியும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரை பயன்படுத்துவது சிறந்த உக்தியாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.