ரோகித் விளையாடாவிட்டால் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் யார்? கவுதம் கம்பீர் பதில்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை இந்திய அணி சந்தித்தது. இதனால், இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- "முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவேளை ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினால் பும்ரா அணியை வழிநடத்துவார். ரோகித் சர்மாவுக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே.எல்.ராகுல் விளையாடுவார். மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக விளையாடவே முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.