இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வில்லியம்சன் அரைசதம்.. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.;

Update:2024-11-30 14:06 IST

கிறிஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக வில்லியம்சன் 93 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர், பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகளும். அட்கின்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 74 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 319 ரன்கள் அடித்திருந்தது. ஹாரி புரூக் 132 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் நாதன் சுமித் 2 விக்கெட்டும், டிம் சவுதி, மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்கே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்று 3-வது ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 171 ரன்களும், ஸ்டோக்ஸ் 80 ரன்களும் அடித்தனர். நியூசிலாது தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 151 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டாம் லதாம் 1 ரன்னிலும், கான்வே 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த இக்கட்டான சூழலில் இருந்து அணியை மீட்டெடுக்க வில்லியம்சன் போராடினார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த ரச்சின் ரவீந்திரா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வில்லியம்சன் 61 ரன்களில் வீழ்ந்தார்.

3-வது நாளில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 155 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தை விட 4 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டேரில் மிட்செல் 31 ரன்களுடனும், நாதன் சுமித் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்