தென் ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்...? - வெளியான புதிய தகவல்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

Update: 2024-11-12 11:45 GMT

Image Courtesy: ICC

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது. இதனால் தாங்கள் விளையாடும் போட்டியை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து தாங்கள் விலகி விடுவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த நிலையில் பிரச்சினையை சமாளிக்க ஐ.சி.சி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்காவிட்டால் ஒட்டுமொத்த தொடரையும் தென் ஆப்பிரிக்காவில் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒப்புக்கொள்ள வைக்க ஐ.சி.சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், துபாயில் போட்டியை நடத்தினாலும் அதற்கான முழு லாபம், டிக்கெட் விற்பனை என அனைத்துமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சேரும் வகையில் ஐசிசி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இன்னும் ஒரு வாரத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பான அட்டவணை தீர்மானிக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்ற பாகிஸ்தான் சம்மதிக்காவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்படும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்