பாக்சிங் டே டெஸ்ட்: சதம் அடித்ததை அப்படி கொண்டாடியது ஏன்..? நிதிஷ் ரெட்டி விளக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.;
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.
இதில் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் வாஷிங்டன் சுந்தருடன் கை கோர்த்த நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அந்தப் போட்டியில் தனது முதலாவது சர்வதேச சதத்தை பதிவு செய்த நிதிஷ் ரெட்டி 114 ரன்கள் குவித்தார். மேலும் நடப்பு தொடரில் சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார்.
சதம் அடித்தவுடன் தன்னுடைய பேட்டை களத்தில் ஊன்றி அதில் ஹெல்மெட்டை வைத்து வானத்தை நோக்கி கையை நிதிஷ் ரெட்டி கொண்டாடியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் சதம் அடித்ததை அப்படி கொண்டாடியது ஏன்? என்பது குறித்து நிதிஷ் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சதத்தை அடித்த பின் என்னுடைய வேட்டை களத்தில் நட்டேன். அதில் ஹெல்மெட்டை வைத்தேன். அந்த வகையில் இந்திய தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினேன். நாட்டுக்காக விளையாடுவது எனக்கு மிகப்பெரிய உத்வேகம்" என்று கூறினார்.