பார்டர் - கவாஸ்கர் கோப்பை: விராட் கோலிக்கு சவால் விடும் ஆஸ்திரேலிய வீரர்
விராட் கோலிக்கு எதிராக அதிரடியான பவுன்சர்களை வீச தயாராக உள்ளதாக லாபுசாக்னே தெரிவித்துள்ளார்.;
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலிக்கு எதிராக அதிரடியான பவுன்சர்களை வீச தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தெரிவித்துள்ளார். 135 கி.மீ வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீசி விராட் கோலியின் ஈகோவை தொட உள்ளதாக லாபுசாக்னே சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் 3-வது பந்துவீச்சாளராக வந்து விராட் கோலிக்கு சவாலை தர விரும்புகிறேன். மக்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கே நீங்கள் ஒருவரின் ஈகோவுடன் விளையாட முடியுமா? என்று பார்க்க வேண்டும். அதற்காக மார்னஸ் வீசும் பவுன்சர்களில் தடுமாறப் போகிறீர்களா என்பதையும் பார்க்க வேண்டும். அணிக்கு தேவைப்படும்போது நான் பந்து வீச தயாராக இருக்கிறேன்.
குறிப்பாக 135 கிலோமீட்டர் பவுன்சர் பந்தை வீச நான் விரும்புகிறேன். அந்த திறன் என்னிடம் இருக்கிறது. இதுவரை அதிகபட்சமாக நான் 132 கி.மீ வேகத்தை தொட்டுள்ளேன். எனவே இன்னும் 3 கிலோ மீட்டர் மட்டுமே. அந்த வேகத்தை நான் உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் வெறுப்பார்கள்" என்று கூறியுள்ளார்.