உல்லாச சுற்றுலாவுக்கா செல்கிறீர்கள்...? பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை கிழித்தெறிந்த முன்னாள் வீரர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஆதிக்-உஜ்-ஜமன், பாகிஸ்தானின் ஆடவர் அணியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Update: 2024-06-20 16:37 GMT

லாகூர்,

டி20 உலக கோப்பை போட்டி தொடரில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. எனினும், கனடாவை வீழ்த்தியது. இறுதியாக அயர்லாந்து அணியுடன் நடந்த போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

ஆனால், புள்ளி கணக்கில் சூப்பர் 8 அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் தேர்வாகவில்லை. இந்த தோல்வியை தொடர்ந்து, பாகிஸ்தான் அணிக்கெதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் சக வீரர்கள் என அனைத்து வீரர்களும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்கள்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஆதிக்-உஜ்-ஜமன், பாகிஸ்தானின் ஆடவர் அணியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோவில், டி20 உலக கோப்பை 2024 போட்டி தொடரின் வீரர்களின் செயல்கள், அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றதுபோல் இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் விடுமுறை நாளை கழிக்க சென்றதுபோல் உணர்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

ஏனெனில், அதுபோன்று நீங்கள் நாடகம் ஆடுகிறீர்கள். எங்களுடைய காலகட்டத்தில், ஒரு பயிற்சியாளர் மற்றும் அவருடன் ஒரு மேலாளர் மற்றும் அணியினர் செல்வது வழக்கம்.

நீங்களோ 17 அதிகாரிகள் மற்றும் 17 வீரர்கள் என செல்கிறீர்கள். நீங்கள் 60 அறைகளை முன்பதிவு செய்திருக்கிறீர்கள் என கூறப்படுகிறது. கேட்கவே நகைச்சுவையாக உள்ளது. நீங்கள் கிரிக்கெட் விளையாட சென்றீர்களா? அல்லது விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றீர்களா? என கேட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கடுமையாக பேசியுள்ளார். இதுபோன்ற பெரிய நிகழ்வுகளில் வீரர்களுடன் குடும்பத்தினர் செல்ல அனுமதிக்க கூடாது. வீரர்கள் நிறைய நேரம் அவர்களுடைய மனைவிகளுடனேயே சுற்றி திரிகிறார்கள். மனைவியுடன் சுற்றுப்பயணம் செய்வது ஒரு வாடிக்கையாகி விட்டது.

அவர்கள் மாலையில் ஒன்றாக வெளியே செல்கிறார்கள். குடும்பம், குழந்தைகள், மனைவி என அவர்களின் கவனம் செல்கிறது. கிரிக்கெட்டில் இருந்து கவனம் மாறுகிறது. உணவு விடுதிக்கு சென்று ஒன்றாக சாப்பிடுகிறார்கள். அதுபற்றிய வீடியோக்களும் வெளிவருகின்றன.

ஒருவருக்கும் ஒழுங்கு என்றால் என்னவென தெரியவில்லை. இதுபோன்ற கலாசாரம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வளர்கிறது. ஒரு பெரிய போட்டியில் விளையாட செல்கிறீர்கள். உங்களுடைய கவனம் எதில் உள்ளது?

2 வாரங்களுக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு, கிரிக்கெட்டில் நீங்கள் கவனம் செலுத்துவது முடியாததா? ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று பேசியுள்ளார். ஆதிக், பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பிற வீரர்களான முகமது ஆமிர், இமத் வாசிம், ஹாரீஸ் ராப், சதாப் கான் மற்றும் அசாம் கான் ஆகிய 5 பேரும் பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கு முன் லண்டன் நகரில் விடுமுறையை கழிக்க முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் சக வீரர்களுடன் சொந்த நாட்டுக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக, லண்டனில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதுபோக்க திட்டமிட்டு உள்ளனர். அவர்களில் சிலர், இங்கிலாந்தில் உள்ளூர் அணிகளில் விளையாடுவது பற்றியும் யோசித்து வருகின்றனர் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்