5-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸி. தடுமாற்றம்
இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாமாகவே முன்வந்து இந்த டெஸ்டில் விளையாடாமல் ஒதுங்கினார். இதனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முதுகில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு புதுமுக ஆல்-ரவுண்டர் வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டார்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய வேகப்பந்தை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் அடித்திருந்தது. கான்ஸ்டாஸ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். கவாஜா (2 ரன்) பும்ரா பந்து வீச்சில் ஸ்லிப்பில் ராகுலிடம் பிடிபட்டார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மார்னஸ் லபுஸ்சேன் 2 ரன்களில் வந்த வேகத்திலேயே பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தார்.
அவரை தொடர்ந்து கான்ஸ்டாஸ் 23 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும் சிராஜின் ஓவரில் வீழ்ந்தனர். இந்த இக்கட்டான சூழலில் ஸ்டீவ் சுமித்துடன் கை கோர்த்த அறிமுக வீரர் வெப்ஸ்டர் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் சுமித் தனது பங்குக்கு 33 ரன்கள் அடித்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வீழ்ந்தார்.
உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 101 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வெப்ஸ்டர் 28 ரன்களுடனும், கேரி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 84 ரன்கள் பின்தங்கி உள்ளது.