முழுவதுமாக இயற்கை விவசாயத்துக்கு திரும்புவது எப்போது?
பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பசுமை புரட்சி வந்த காலத்தில் ரசாயன விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது. இயற்கை விவசாயத்துக்கு முழுவதுமாக திரும்புவது எப்போது? என்பது தான் விவசாயிகள் உள்பட பலரின் கேள்வியாக இருக்கிறது.;
உணவு பொருட்களை விளைவிக்கும் விவசாயி தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்கிறோம். அந்த விவசாயி விளைவிக்கும் பொருட்களை தாங்கி இருக்கும் நிலத்தை நாம் எப்படி பார்க்கிறோம். அது தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா?. இயற்கை விவசாயம் என்பது விவசாயிகளின் நலன், நுகர்வோரின் உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றை சார்ந்ததாக இருக்கிறது.
'தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடிய பாரதியார், இன்று உயிரோடு இருந்திருந்தால், 'ரசாயனம் கலந்த செயற்கை விவசாயத்தில் கிடைக்கும் உணவு பொருட்களை அழித்திடுவோம்' என்று எழுதியிருப்பார். ஏனென்றால் அந்த அளவுக்கு ரசாயன இடுபொருட்களினால் மண் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதோடு, கேடு நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். இதே நிலை தொடருமானால் பிற்காலத்தில் மண் மலடாகிவிடும், விளை நிலங்கள் இல்லாமல் உணவு பொருட்களுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்ற எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
ரசாயன இடுபொருட்கள்
'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று சொல்லுவார்கள். அந்த வகையில் இயற்கை உணவை விளைவித்து, போதுமான அளவில் பயன்படுத்திய வரை இயற்கை விவசாயம் அழியாமல் தான் இருந்தது. ஆனால், அதிகம் விளைவிக்க வேண்டும், அதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கம், ஆசை வந்த பிறகு தான் இயற்கை விவசாயத்தில் இருந்து, செயற்கை விவசாயத்துக்கு தடம் புரண்டோம்.
இது ஒரு புறம் இருக்க பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பசுமை புரட்சி வந்த காலத்தில் ரசாயன விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது. இப்போது ரசாயன உரங்கள் இல்லாவிட்டால், விவசாயமே நடக்காது என்ற நிலை வந்துவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.
இப்போது பலருக்கும் இயற்கை விவசாய உணவு பொருட்களின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வரத்தொடங்கி இருக்கிறது. இதனால் பலரும் தங்களுடைய வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் காய்கறி போன்ற உணவு பொருட்களை தயாரித்து பயன்படுத்த தொடங்கி இருப்பது நாம் பலரும் அறிந்த ஒன்றே. ஆனாலும் இயற்கை விவசாயத்துக்கு முழுவதுமாக திரும்புவது எப்போது? என்பது தான் விவசாயிகள் உள்பட பலரின் கேள்வியாக இருக்கிறது.
மண் வளம்
இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு விவசாயிகளின் கரம் தான் முதலில் ஓங்க வேண்டும். அவர்கள் ரசாயன இடுபொருட்களை தவிர்த்து, தொடர்ந்து இயற்கை சார்ந்த இடுபொருட்களை பயன்படுத்தினால் அவர்களின் மண் வளமிக்கதாக மாறும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதனை பின்பற்றி விவசாயிகள் பலர் தங்களுடைய மண்ணை வளம் மிக்க மண்ணாக மாற்றி, விளை பொருட்களின் மகசூலை அதிகரித்து வருகின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45 டன் வரை தான் கரும்பு மகசூல் கிடைக்கும் என்று கூறி வந்த நிலையில், இயற்கை விவசாயத்தை பின்பற்றிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் இரு மடங்கு கரும்பு மகசூலை பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அதாவது 90 டன் கரும்பு அறுவடை கிடைத்து இருக்கிறது. இதுபோல், ஒவ்வொருவரும், மண் வளத்தை பெருக்கினால், நிச்சயம் இயற்கை விவசாயத்தை நாம் மீட்டெடுக்க முடியும்.
அங்கக வேளாண் கொள்கை
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இயற்கை விவசாயத்தை மீண்டும் தலைநிமிர செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பலருடைய மனதிலும் இருக்கிறது. இதற்கு அரசு சார்பிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில், தற்போது மாநில அரசும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல முன்முயற்சிகளை எடுக்க தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கை விவசாயத்துக்கு என்று தனிக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் இதுதொடர்பாக அங்கக வேளாண் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
உயிர் பெற செய்யவேண்டும்
அதன்படி, இந்த கொள்கை மூலம் வட்டார அளவில் மாதிரி இயற்கை விவசாய பண்ணைகள், இயற்கை விவசாயம் தொடர்பான விழாக்கள், இயற்கை இடுபொருட்கள் தயார் செய்ய மகளிர் குழுக்களுக்கு பயிற்சி, இயற்கை விவசாய விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்பட இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த செயல்பாடுகள் பெயரளவில் மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, இயற்கை விவசாயத்தை உயிர் பெற செய்ய வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.