இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருவது பற்றி? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்

அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.;

Update:2023-10-03 15:24 IST

கேள்வி: பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் அவரது தேர்தல் தந்திரங்களில் ஒன்று என்கிறதே காங்கிரஸ்? (மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்)

பதில்: ஓட்டு வேட்டையாட பா.ஜ.க.வும், தங்களுக்கு சாதகமாக்க எதிர்க்கட்சிகளும் விஸ்வகர்மா திட்டத்தை பயன்படுத்துகிறது. எந்த பக்கம் வெற்றி என்பதை தேர்தல் முடிவு சொல்லும்.

கேள்வி: இப்போதெல்லாம் இதயத்தால் இணையும் காதலர்களை விட, இணையத்தால் இணையும் காதலர்கள் அதிகமாகி விட்டார்களே? (பொன் வசந்தன், பணகுடி)

பதில்: இதயத்தால் இணையும் காதல், வாழ்வின் இறுதி வரை நீடிக்கும். இணையத்தால் இணையும் காதலில், உள்ளத்தோடு உள்ளம் உறவாடுவதில்லையே!

 

கேள்வி: கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைப்பிடிப்போர் அ.தி.மு.க.வில் இருக்கின்றனரா? (பி.கனகராஜ், அரசரடி, மதுரை)

பதில்: அண்ணாவின் இந்த தாரக மந்திரத்தை பின்பற்றுபவர்கள் தான் அண்ணாவின் உண்மையான தொண்டர்கள்.

கேள்வி: 'இது துரோணாச்சாரியர்களின் காலம் அல்ல, ஏகலைவனின் காலம்' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து... (பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைபுதூர், தேனி)

பதில்: திறமை இருந்தால் எந்த இனத்தைச் சார்ந்தவர்களும் இமயத்தை தொடமுடியும் என்பதைத்தான் கூறுகிறார். 

கேள்வி: மர்மம் - ரகசியம் என்ன வித்தியாசம்? (கலாவதி, காரைக்கால்)

பதில்: யாருக்கும் தெரியாத ரகசியமே மர்மம்.

கேள்வி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருவது பற்றி? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)

பதில்: இதற்கு மத்திய அரசாங்கம் தான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்க வேண்டும். கச்சத் தீவை மீட்பது தான் இதற்கு ஒரே வழி. 

கேள்வி: திருமணமான பெண்கள் தங்கள் கணவனை, குழந்தைகளை கவனிப்பது, சமையல் வேலை செய்வது எனப் பல வகையில் துன்புறுத்தி வருவது சரிதானா? (டி.கே.மது, கிருஷ்ணன்கோவில் தெரு, பாளையங்கோட்டை)

பதில்: இல்லறம் இருவருக்குமானது. பகிர்ந்தால் பரவசம். தவிர்த்தால் குடும்பத்தில் குழப்பம்.

கேள்வி: தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண் உயிர் இழந்துள்ளாரே? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: அதனால் தான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்துகிறது.

கேள்வி: இளமையில் வறுமை தானே, முதுமையில் நல்ல முன்னேற்றம் தரும்? (ப.அண்ணாமலை, கஸ்தூரி நகர், ஒட்டன்சத்திரம்)

பதில்: இளமையில் வறுமையும், உணவின்மையும் உடல் வாட்டத்தையும், மூளை பாதிப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதால் இளமையில் வறுமை கொடிதினும், கொடியது.

கேள்வி: சேர்ந்து போகும் அனைவருமே சேர்ந்து வாழாமல் சோர்ந்து போகிறார்களே... ஏன்? (ஆ.ஜெயசீலிராணி, புதுக்கோட்டை)

பதில்: திருமணமான முதல் 30 நாட்களில் எந்த பிணக்கும் இல்லாமல், எந்த விவாதமும் இல்லாமல் இருந்து விட்டால் எப்போதுமே மகிழ்ச்சி குறையாமல் வாழமுடியும்.

 

கேள்வி: மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுகின்ற ஆசிரியர்களில் ஒரு சிலர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வது பற்றி? (மு.பெரியசாமி, விட்டுக்கட்டி, திருத்துறைப்பூண்டி)

பதில்: விதிவிலக்குகள் எப்போதும் உண்டு.

கேள்வி: பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ. 1,000 வழங்கிவிட்டு டாஸ்மாக் விலையேற்றம் மூலம் மதுப்பிரியர்களின் உரிமையில் தமிழக அரசு கை வைத்துவிட்டதே ஏன்? (ஜா.ஸ்டீபன்ராஜ், கீரமங்கலம்)

பதில்: மது அருந்துவதை குறைப்பதற்கான யுக்தியாகவே அதை நான் பார்க்கிறேன்.

கேள்வி: ரெயில் பயணிகளை விருந்தினர்களைப் போல நடத்துங்கள் என்று ரெயில்வே ஊழியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுரை கூறியிருக்கிறாரே? (ஜெ.மணிகண்டன், திரு.வி.க. நகர், பேரணாம்பட்டு)

பதில்: சபாஷ்! சரியான அறிவுரை! ஆனால், வேண்டா விருந்தாளியைப் போல நடத்திவிடக் கூடாது.

கேள்வி: வாசகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் எப்படி சுவைபட பதில் தருகிறீர்கள், பேனா மன்னரே? (டி.ராஜன், கோச்சடை, மதுரை)

பதில்: உங்கள் கேள்விகள் எல்லாம் சுவையாக இருப்பது தான் காரணம்.

 

Tags:    

மேலும் செய்திகள்