இஸ்ரேல் - 'ஹமாஸ்' மோதலின் பின்னணி

இஸ்ரேல் மீதான ஹமாஸ் போராளிகளின் அதிரடி தாக்குதல், அதற்கு இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் பற்றி எரிகிறது, இஸ்ரேல்-பாலஸ்தீனம். இந்த ரத்தக்களறியான மோதலுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.;

Update:2023-10-08 01:56 IST

குட்டி தேசம்

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு குட்டி தேசம்தான் இஸ்ரேல். ஆனால் இந்த நாடு உலக வரைபடத்தில் ஏற்கனவே இருந்த நாடு அல்ல. புதிதாக 'உருவாக்கப்பட்ட' நாடு. மிகவும் மதியூக இனமான யூத இனம், தங்களுக்கு என்று ஒரு தனி நாடு இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. ஐரோப்பா உள்பட பல்வேறு பகுதிகளில் பரவி வாழ்ந்த யூதர்கள், உலகெங்கும் ஒடுக்கப்பட்டார்கள். ஹிட்லரின் நாஜிக்களால் கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் தங்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்தார்கள், அதற்காக ஆலோசித்தார்கள்.

தோன்றியது முதல், சண்டை

தங்களின் மூதாதையரின் பூமியாக அவர்கள் கருதிய பாலஸ்தீன பகுதியில், அங்கு ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வந்த அரேபியர்களிடம் நிலங்களை வாங்கி குவிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் திட்டம் புரியாமல் அரேபியர்களும் பாலை நிலம்தானே என்று மலிவாக தங்கள் பூர்வீக பூமியை விற்றுத்தள்ளினார்கள்.

நாஜிக்கள் நடத்திய படுகொலையும் யூதர்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆதரவு, ஆசீர்வாதத்துடன் 1948-ம் ஆண்டு மே 14-ந்தேதி இஸ்ரேல் பிறந்தது. அதற்கு மறுநாளில் இருந்து சண்டை... சண்டை... சண்டைதான்.

தொடர் மோதல்

சுற்றிலும் தாங்கள் எதிரிகளாக கருதிய அரபு நாடுகளுக்கு மத்தியில் இருந்ததால், எப்போதும் கையில் 'வாளுடன்' இருந்தால்தான் உயிர் பிழைப்போம் என்பதில் இஸ்ரேல் தெளிவாக இருந்தது. பதிலடி அல்ல, பல நேரங்களில் முதலடி கொடுத்து அச்சத்தை விதைத்து வைத்தது. தனது நாட்டைச் சுற்றிய பகுதிகளை மெல்ல மெல்ல சுவீகரிப்பதிலும் கவனமாக இருந்தது. பிற நாடுகளின் அங்கீகாரம், எதிர்ப்பு பற்றி கவலைப்படாமல், மேற்கு கரை போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டது. அங்கு யூதர்களை பெருமளவில் குடியேற்றியது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பூர்வீக பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், தொடர் மோதல், இரு தரப்பிலும் இடையறாத உயிர் இழப்பு.

'ஹமாஸ்' அமைப்பு

அதிலும் இஸ்ரேலுக்கு எதிராக தீவிரமாக முன்னிற்பது, தற்போது தாக்குதலை தொடுத்துள்ள 'ஹமாஸ்' அமைப்பு. 'ஹரக்கா அல் முக்காவமா அல் இஸ்லாமியா' அதாவது, 'இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்' என்பது, 1987-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் முழுப்பெயர். இஸ்ரேலின் ராக்கெட்டுகளுக்கு ராக்கெட்டுகளால், துப்பாக்கிகளுக்கு துப்பாக்கிகளால் பதில் கொடுப்பதே சரியாக இருக்கும் என்பது இதன் நிலைப்பாடு.

பாலஸ்தீனத்தின் காசா துண்டுநிலப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'ஹமாஸ்' அங்கிருந்து அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி தூக்கத்தை கெடுத்துவருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது நில வழி, வான் வழி, கடல்வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி கொடூர தாக்குதலை நடத்திவருகிறது. அதற்கு முன்னோட்டமாக இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்திருக்கிறது. 'ஹமாஸ்' அமைப்புக்கு ஈரான் போன்ற நாடுகளின் வெளிப்படையான ஆதரவும், பல அரபு நாடுகளின் மறைமுக அரவணைப்பும் உண்டு.

வெளியேறும் இந்தியர்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்புமே விட்டுக்கொடுக்காத 'சண்டைக்கோழிகள்' என்பதால், இந்த சச்சரவில் விரைவில் சமரசம் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதே வேதனையான உண்மை. இதில், இரு தரப்பிலும் அப்பாவி பொதுமக்களின் நிலைதான் பரிதாபம்.

இஸ்ரேலில் கல்வி, வர்த்தக விஷயங்களுக்காக தங்கியிருக்கும் சுமார் 15 ஆயிரம் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டவர்களும் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்