எல்லோரையும் நேசிப்பவர்கள் இந்துக்கள்: சத்தியம், சிவம், சுந்தரம் - ராகுல்காந்தி
இந்துக்கள் தங்களது பயத்தை ஒருபோதும் கோபம், வெறுப்பு அல்லது வன்முறைக்கான களமாக மாற்ற அனுமதிக்கமாட்டார்கள்.
பரந்து விரிந்த கடலில் அதன் அழகை ரசித்தபடி மிகுந்த மகிழ்ச்சியோடு நீந்தி செல்வது போன்று வாழ்க்கையை கற்பனை செய்து கொள்ளுங்கள். கடலின் அழகை ரசித்து வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளும் நாம் அதன் ஆழத்தை கண்டு பயம் கொள்கிறோம்.
மனதை கொள்ளை கொள்ளும் கடல் அழகு மற்றும் அளவில்லா மகிழ்ச்சி கடல் பயணத்தில் இருந்தாலும் ஆழத்தின் பயத்தை தவிர்த்து மரண பயம், தோல்வி பயம், பசி, இழப்பு, பயத்தினால் ஏற்படும் வலி, வாழ்க்கையின் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு பயம் அந்த வாழ்க்கை பயணத்தில் நம்மை தொற்றி கொள்கிறது.
கூட்டு பயணம் தான் வாழ்க்கை
ஆனாலும் நமக்குள் இருக்கும் பலம் மற்றும் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை கடந்து செல்ல முயற்சிக்கிறோம். இந்த அழகான கடலின் வழியாக செல்லும் கூட்டு பயணம் தான் நமது வாழ்க்கை. நாம் அனைவரும் ஒன்றாக நீந்தி செல்கிறோம். இது, மிகவும் அழகாக இருக்கிறது. அதேவேளையில் பயமாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை என அழைக்கப்படும் இந்த பரந்து விரிந்த கடல் பயணத்தில் பயணிக்கும் நம்மில் யாரும் தொடர்ந்து வாழப்போவது இல்லை. யாரும் இந்த கடல் பயணத்தில் தொடர்ந்து இருக்கவும் முடியாது.
தவறாக புரிந்துகொள்ள செய்யும்
வாழ்க்கை பாதை எனும் பயத்தில் இருந்து மீண்டு வரும் வகையிலான தைரியத்தை கொண்டுள்ள ஒருவர், வாழ்க்கை எனும் இந்த கடலை உண்மையாகவே உணர்வு பூர்வமாக நேசிப்பார். அப்படிப்பட்டவர் தான் இந்து மதத்தை சார்ந்தவர். இந்து மதம் என்றாலே சில குறிப்பிட்ட கலாசார பண்பாட்டு நெறிமுறைகளை கொண்டது என சிலர் கூறுவது மற்றவர்கள் இந்து மதத்தை பற்றி தவறாக புரிந்து கொள்ள செய்யும். இந்து மதத்தை ஒரு குறிப்பிட்ட தேசம் அல்லது புவியியல் அமைப்புடன் பிணைப்பது அதனை மட்டுப்படுத்தும் செயலாகும்.
அன்பு-கருணை
இந்து மதம் என்பது உறவை புரிந்து கொள்வதும், அடுத்தவரின் துயரத்தை தீர்க்க கைகொடுப்பதும் தான். இது சத்தியத்தை உணர்தலை நோக்கிய பாதையாகும். இது யாருக்கும் சொந்தமானது அல்ல. இருந்தபோதிலும் அந்த பாதையில் நடக்கலாம் என தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவருக்கும் உரியதாகும்.
ஒரு இந்து தன்னை மட்டுமல்லாமல், இந்த வாழ்க்கை பெருங்கடலில் உள்ள அனைவரையும் அன்புடனும், கருணையுடனும், மரியாதையுடனும் பார்க்கிறார். அதற்கு காரணம் என்னவென்றால் நாம் அனைவரும் வாழ்க்கை எனும் பரந்து விரிந்த அந்த அழகான அதேவேளையில் பயம்கொள்ளும் அதே கடலில் தான் நீந்துகிறோம் என்பதையும், ஒருவேளை மூழ்குவதென்றால் எல்லோரும் சேர்ந்து தான் மூழ்குவோம் என்பதையும் புரிந்து கொள்கிறார்.
கைகொடுத்து பாதுகாக்கிறார்கள்
அதேவேளையில் தன்னை சுற்றி நீந்த முடியாமல் தவிக்கும் அனைவரையும் இந்துக்கள் கைகொடுத்து பாதுகாக்கிறார்கள். வாழ்க்கை எனும் கடலில் மிகுந்த பதற்றம், ஆபத்தான சூழலில் இருப்பவர்களையும் கூட எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான சூழலுக்கு கொண்டு வரும் எச்சரிக்கை மணியாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.
மற்றவர்களை, குறிப்பாக பலவீனமானவர்களை காக்கும் இந்த செயல் மற்றும் கடமையை பொறுத்தமட்டில் இது தனது வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய தர்மம் என இந்துவாக இருப்பவர்கள் உணர்கிறார்கள்.
உண்மை மற்றும் அகிம்சையின் மூலம் உலகில் கண்ணுக்கு தெரியாதவர்களின் கவலைகளை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பணியிலும் அவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்கிறார்கள்.
வாழ்க்கை முழுவதும் வழிகாட்டுகிறது
ஒரு இந்து தன்னுள் இருக்கும் பயத்தை ஆராய்ந்து அதை எதிர்கொள்ளவும், தழுவி கொண்டு மீண்டெழவும் தைரியம் உள்ளவராக இருக்கிறார்.
எதிரியை நெருங்கிய நண்பராக மாற்றிக்கொள்வதன் மூலம் பயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கலையை இந்துவாக இருப்பவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அது அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வழிகாட்டுகிறது.
இந்துக்கள் தங்களது பயத்தை ஒருபோதும் கோபம், வெறுப்பு அல்லது வன்முறைக்கான களமாக மாற்ற அனுமதிக்கமாட்டார்கள்.
எதுவும் நிலைத்து நிற்பதில்லை
எவ்வளவு அறிவு இருந்தாலும் அது வாழ்க்கை எனும் கடலின் கூட்டு முயற்சியில் இருந்து உருவாகிறது என்பதை இந்துக்கள் அறிவார்கள். அது அவர்களுக்கான சொத்து மட்டுமே என அவர்கள் கருதுவது இல்லை.
வாழ்க்கை எனும் நீரோட்டத்தில் ஒவ்வொரு விஷயங்களும் தொடர்ந்து மாறி வருவதும், எதுவும் நிலைத்து நிற்பதில்லை என்பதையும் இந்துவாக இருப்பவர்கள் அறிவார்கள்.
இந்துக்கள் ஆழமான பேரார்வ உணர்வுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களை புரிந்துகொள்வதற்கு தங்களது திறந்த மனதை ஒருபோதும் மூடுவதில்லை என்பதை பல தருணங்களில் உறுதி செய்கிறார்கள்.
எல்லோரையும் நேசிக்கிறார்கள்
இந்துக்கள் அடக்கமானவர்கள். எப்போதுமே வாழ்க்கை எனும் பெரும் சமுத்திரத்தில் நீந்துகிற ஒவ்வொரு மனிதனையும் கூர்ந்து கவனித்து அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
இந்துக்கள் எல்லா உயிரினங்களையும் நேசிக்கிறார்கள். மேலும், அவை ஒவ்வொன்றும் வாழ்க்கை எனும் கடலில் நீந்தி செல்லவும், அதே கடலில் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கவும், கடலை புரிந்து கொள்ளவும் உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இந்துவாக இருப்பவர்கள் எல்லா பாதைகளையும் தங்களுக்கு சொந்தமானது போல் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள்.