பேனா மன்னன் பதில் சொல்கிறார்

Update: 2023-05-09 05:14 GMT

கேள்வி: காலில் ஊறல் எடுத்தால் தேங்காய் எண்ணெய் தான் மருந்து. சில அரசு ஊழியர்களிடம் ஏதாவது காரியத்துக்கு சென்றால் அவர்கள் கையில் ஊறல் எடுக்கிறதே , இதற்கு என்ன மருந்து? (எஸ்.ஆர். அய்யப்பன், மதுரை -11)


பதில்: கம்பி எண்ண வைப்பது தான் நல்ல மருந்து.

கேள்வி: குழந்தை வளர்க்கும் பொறுப்பு ஆண்களுக்கா , பெண்களுக்கா ? (கே.நடராஜன், திருவண்ணாமலை )

பதில்: இருவருக்கும் உள்ள கூட்டுப பொறுப்பு.

கேள்வி: குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்கிறார்களே , இது அரசியல் வாதிகளுக்கு...? (ஜே .எஸ்.சரவணன் , தட்டானூர்)

பதில்: அவர்கள் தான் ஒருபோதும் அப்படி பார்ப்பதே இல்லையே. அதனால்தான் புதுப்புது கூட்டணிகள் உருவாகின்றன. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை , எதிரிகளும் இல்லை என்பது அதற்கு தான்.

கேள்வி: மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பெறுவது சாதனையா, வேதனையா? (த.சத்தியநாராயணன் , அயன்புரம்)

பதில்: சவால் மட்டுமல்ல, வளமான எதிர்காலத்துக்கு வாய்ப்பு தான்.

கேள்வி: அரசியலில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)


பதில்: ஊழல்வாதிகள் தான்.

கேள்வி:- உண்மை பேசுபவர்களின் பேச்சை விட பொய், புரட்டு நிறைந்தவர்களின் பேச்சு வசீகரமாக உள்ளதே .... (மணிவண்ணன் , கிருஷ்ணாபுரம்).

பதில்:- ரோஜா மலரை விட வாசமில்லாத காட்டுமலர்தான் அழகாக இருக்கும். ஆனால் யாருக்கும் அது பயனில்லை .

கேள்வி:- இன்னும் ஆணவ கொலைகள் நடக்கத் தானே செய்கிறது? (திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை , சேலம்)

பதில்:- பெரியார் கொள்கைகள் இன்னும் ஆழமாக வேரூன்ற வேண்டும்.

கேள்வி:- நேர்மையாக வாழ வேண்டும் என்றால் ஏழ்மையுடன் தானே வாழவேண்டி உள்ளது? (ப.ராமகிருஷ்ணன் , அறந்தாங்கி).

பதில்:- ஏழ்மையாக வாழ்ந்தாலும் மனநிறைவுடன் வாழலாம். நல்ல தூக்கம் வரும். நேர்மை ஏழ்மையை தோற்கடித்துவிடும்.

கேள்வி: கணவன் - மனைவி சண்டையை ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்திவிட வழிஏதாவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ? (ஜெ .மணிகண்டன், பேரணாம்பட்டு, வேலூர்)


பதில்: கணவன் முதலிலேயே மன்னிப்பு கேட்டுவிடுவது தான் சிறந்த வழி.

கேள்வி: அரசியலில் நிலைத்து நிற்க எது வேண்டும், திறமையா? அதிர்ஷ்ட மா? (வண்ணை கணேசன் , பொன்னியம்மன்மேடு)

பதில்: திறமை கலந்த அதிர்ஷ்டம் வேண்டும்.

கேள்வி:- தமிழக அரசு மகளிருக்கு மாதம் ரூ.1,000 ஆயிரம் வழங்குவதை செப்டம்பர் மாதம் வரை அரியர் போட்டு தரவேண்டும், என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே ... (பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனை புதூர்)

பதில்:- பாராட்டு சொல்லிவிட்டு அரியர்ஸ் கேட்டிருக்கலாம்.

கேள்வி: அரசியல்வாதிகளுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (குலசை நஜிமுதீன், மாம்பாக்கம்)



பதில்: அரசியல்வாதி எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவது இல்லை . ஆன்மிகவாதி கடந்த காலத்தை பற்றி கவலைப்படுவதில்லை .

கேள்வி: பேனா மன்னரே , இப்போதும் சிலர் முககவசம் அணிவது ஏன்? (மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம், கர்நாடகா)

பதில்: முன் எச்சரிக்கை நடவடிக்கை தான்.

கேள்வி: சொர்க்க வாசல், திருமணவாசல். இதில் எது சிறந்தவாசல்? (டி.என்.ராமு, தேங்கா மரத்துப்பட்டி)



பதில்: திருமணவாசல் தான் சொர்க்க வாசலை நிச்சயிக்கிறது.

கேள்வி: தமிழகத்தில் நாளுக்கு நாள் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறதே ? (ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)

பதில்: குறைந்த ஊதியம், அதிக வேலை , கடும்உழைப்பு காரணமாக வடமாநில தொழிலாளர்களுக்கு கிராக்கி இருக்கிறது. அது தமிழக தொழிலாளர்களிடம் காணவில்லை .

கேள்வி: விதவை தாய்க்கு அவரது மகன் முன்நின்று திருமணம் நடத்தி வைத்துள்ளாரே? (டி.ஆர்.உதயரசன் , வாடிப்பட்டி)

பதில்: மிக சிறந்த மகன். திருமணம் என்பது நெஞ்சத்து உணர்வுகளை பகிரத்தானே தவிர, உடல் உணர்ச்சிகளை பரிமாறிக்கொள்ள மட்டுமல்ல.

கேள்வி: முத்தம் பெறுவது, முத்தம் தருவது - எதில் கிக் அதிகம்? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)



பதில்: தருவது, பெறுவது இரண்டிலுமே கிக் அதிகம். ஒரே நேரத்தில் செய்தால் சுகமோசுகம்.


கேள்வி: ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் தெரிவித்துள்ளாரே . (ராமராஜன், சேலம்)

பதில்: பட்டா வாங்குவதற்கு மக்கள் படும் பாட்டுக்கு இது ஒன்றே சான்று.

கேள்வி: கண்டிப்பான கரிசனத்தை பிள்ளைகளிடம் காட்டும் பெ ற்றோரை சில பிள்ளைகள் எதிரிகளை போல பாவிக்கிறார்களே , ஏன்? (கல்யாணி ரமேஷ், ஆயக்குடி)

பதில்: எத்தனையோ பெற்றோர் செல்லம் கொடுத்து கெடுப்பதை பாசம் என்று பிள்ளைகள் தவறாக நினைப்பதால் தான்.

Tags:    

மேலும் செய்திகள்