தமிழக அரசின் புதிய முயற்சி: 93 ஆயிரம் ஹெக்டேர் விதை பண்ணைகளை பதிவு செய்ய இலக்கு

வேளாண்மையே தேசத்தின் உச்சகட்ட உந்து சக்தி ஆகும். உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தன்னிறைவு அடையவும் விவசாயத்தில் தரமான இடுபொருட்களை பயன்படுத்துவது அவசியம்.

Update: 2023-06-22 12:04 GMT

வேளாண் இடுபொருட்களில் விதை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு வேளாண்மை முறையிலும் அதிக வேளாண் உற்பத்திக்கு தரமான சான்றளிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்துவது அவசியம்.

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான விதைகள் போதுமான அளவில் கிடைப்பதற்காகவும், தரமான விதைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையின் மூலம் தொடர்ந்து தர மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக 2022-23-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி, விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனரகத்தின் தலைமையகம் கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, கடந்த ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இடைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையானது விதை சான்று விதை தர கட்டுப்பாடு விதை பரிசோதனை பயிற்சி மற்றும் அங்கக சான்றழிப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விதை சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 ஆகிய சட்ட அமலாக்கத்தின்படி விதை சான்றளிப்பு பிரிவு செயல்படுகிறது. இது இந்திய குறைந்தபட்ச விதைச்சான்று தர நிலைகளை பூர்த்தி செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்ட பயிர் மற்றும் ரகங்களில் விதை சான்று பணி மேற்கொள்ளப்படுகிறது. வல்லுனர் விதை ஆய்வுக் குழு மூலமாக வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் வல்லுனர் விதை வயல்களில் தரங்களை ஆய்வு செய்து அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு வல்லுனர் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் ஆண்டில் இக்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 147 மெட்ரிக் டன் வல்லுனர் விதை உற்பத்தி செய்யப்பட்டது.

விதைச் சான்று துறையில் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர் மூலம் அமைக்கப்படும் விதை பண்ணைகளில் விதையின் ஆதாரத்தை ஆராய்தல், வயல் ஆய்வு, சுத்தி பணி, விதைத்தரங்கள் பரிசோதனை மற்றும் சான்று அட்டை பொருத்துதல் ஆகிய தொடர் பணிகளின் மூலம் தரமான சான்று விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. விதை சான்றளிக்கும் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் 73,948 ஹெக்டேர் விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு, 1,34,648 மெட்ரிக் டன் விதைகள் சான்றளிக்கப்பட்டு உள்ளன.

மேலும் 2023-24-ம் ஆண்டில் 93,000 ஹெக்டேர் விதை பண்ணைகளை பதிவு செய்யவும், 1,30,000 மெட்ரிக் டன் தரமான விதைகளுக்கு சான்றளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ''மாநிலத்தில் தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிப்பதை உறுதி செய்திட, விதை தர கட்டுப்பாடு, விதை ஆய்வு பிரிவு, தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களான விதைகள் சட்டப்பிரிவுகளை அமல்படுத்தி தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிப்பதை உறுதி செய்கின்றது. இந்த துறையின் மூலம் 12,881 விதை விற்பனை நிலையங்களுக்கு விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விதை விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, தரமற்ற விதை குவியல்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும், சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'', என்றனர்.

மேலும் 2022-23-ம் ஆண்டில் 75,136 விதை விற்பனை நிலைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்ட 55,353 ஆய்வு விதை மாதிரிகளில் 54,758 மாதிரிகளுக்கும், தனியார் மற்றும் விதை நிறுவனங்கள் மூலமாக எடுக்கப்பட்ட 27,862 பணி விதை மாதிரிகளில் 27,762 மாதிரிகளுக்கும், விதை பரிசோதனை நிலையங்கள் மூலம் மொத்தம் 82,520 விதை மாதிரிகளின் தரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

விதை பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்ட 2,494 தரமற்ற விதை மாதிரிகளில் 1,516 விதை மாதிரிகளுக்கு துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலமாக ரூ.3.46 கோடி மதிப்பிலான 459 மெட்ரிக் டன் அளவிலான விதை குவியல்களுக்கு விற்பனை தடையும், 174 விதை மாதிரிகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தரமற்ற விதைகள் மற்றும் பிற விதிமீறல்களுக்காக 2,165 மெட்ரிக் டன் அளவிலான விதை குவியல்களுக்கு விற்பனை தடை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

2023-24-ம் ஆண்டில் 75 ஆயிரம் விதை விற்பனை நிலைய ஆய்வுகள் மேற்கொள்ளவும், 60 ஆயிரம் ஆய்வு விதை மாதிரிகளில் தர பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்