சின்ன வெங்காயம் சாகுபடியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 92 லட்சம் மானியம் வழங்கப்பட இருக்கிறது.

Update: 2023-06-08 11:55 GMT

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் தான் சின்ன வெங்காயம் சாகுபடிக்கு உகந்ததாக இருக்கிறது. விவசாயிகள் இதனை சின்ன வெங்காயம் என்றும், சாம்பார் வெங்காயம் என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். அதிக செலவு, முதலீடு என்று இருந்தாலும் மருத்துவ குணங்களை கொண்ட சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் வெங்காய பரப்பில் 90 சதவீதம் சாம்பார் அல்லது சிறிய வெங்காயத்தைத்தான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மீதமுள்ள 10 சதவீதம் பரப்பில்தான் பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பல்லாரி சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் சின்ன வெங்காயம் வீடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதன் தேவை அதிகமாக இருக்கிறது.

5 லட்சம் டன் உற்பத்தி

சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை, பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, நாமக்கல், திண்டுக்கல், கோவை, விருதுநகர் மாவட்டங்களிலும், பெரிய வெங்காயம் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

பல்லாரியை பொறுத்தவரையில், உணவகங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பெரிய வெங்காயத்தை பொறுத்தவரைஅண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம், மத்தியபிரதேசம் மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 44 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் இந்த வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 5 லட்சத்து 32 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

6 ரகங்கள்

தமிழ்நாட்டில் கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ 5, கோ 6 ஆகிய 6 ரகங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் கோ 5, கோ 6 ரகங்களை தவிர மற்ற ரக சின்ன வெங்காயம் ஒரு ஹெக்டேருக்கு 70 முதல் 90 நாட்களில் 12 முதல் 16 டன் மகசூல் கிடைப்பதாகவும், கோ 5, கோ 6 ரக வெங்காயம் 90 நாட்களில் ஒரு ஹெக்டேரில் 18 டன் வரை அறுவடை செய்யப்படுவதாகவும் தோட்டக்கலைத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன வெங்காயம் சாகுபடி சிறப்பாக இருக்கிறது என்றும், நல்ல விலை சின்ன வெங்காயத்துக்கு இருப்பதால், சரியான மகசூல் கிடைத்தால் விவசாயிகள் நல்ல வருவாயை ஈட்ட முடியும் என்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மானியம்

கடந்த ஆண்டில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் வெங்காயம் பயிரிடுவதற்கு ரூ.4 கோடி நிதி மானியமாக வழங்கப்பட்டது.

நடப்பாண்டில் சின்ன வெங்காயம் ஆண்டுதோறும் சீராக கிடைப்பதற்கு, சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் சில உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 3 ஆயிரத்து 460 ஹெக்டரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 92 லட்சம் மானியம் வழங்கப்பட இருக்கிறது.

சேமிப்பு கூடங்கள்

மேலும் 3 ஆயிரம் ஹெக்டேரில் ரூ.36 லட்சம் நிதியில் வெங்காயம் சாகுபடிக்கான ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலாண்மையை செயல்படுத்த உள்ளது. 1,500 ஹெக்டேர் சாகுபடி பரப்பில் ரூ.2 கோடியே 40 லட்சம் நிதியில் களைகளை கட்டுப்படுத்துவதற்கும், நீரை சிக்கனப்படுத்துவதற்கும் நிலப்போர்வை அமைக்கப்பட இருக்கிறது.

நிலத்தை தயார் செய்யவும், விதைகளை விதைக்கவும், உரத்தை இடுவதற்காகவும் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிதியில் 30 பவர் டிரில்லர்களும், ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் நிதியில் 200 தெளிப்பான்களும் வழங்கப்பட உள்ளன. முக்கியமாக விலை வீழ்ச்சியின்போது வெங்காயத்தை சேமித்து வைத்து, சீரான விலை கிடைக்க செய்திட ரூ.26 கோடியே 95 லட்சம் நிதியில் 77 ஆயிரம் டன் கொள்ளளவில் குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்