தேசத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மதன் தாஸ் தேவி - பிரதமர் நரேந்திர மோடி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மதன் தாஸ் தேவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் இழந்தபோது, நான் உள்பட லட்சக்கணக்கான தொண்டர்கள் (காரியகர்த்தாக்கள்) வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரத்தில் மூழ்கினோம்.
கலங்கரை விளக்கம்
மதன் தாஸைப் போன்ற ஒரு ஆளுமை இப்போது நம்மிடையே இல்லை என்பதை ஏற்க இயலவில்லை. ஆனால் இது யதார்த்தம். அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என நாம் ஆறுதல் அடைகிறோம். அவரது கருத்துகள் மற்றும் கொள்கைகள் எதிர்கால பயணத்தில் உத்வேகத்தை அளித்து, கலங்கரை விளக்கமாக தொடர்ந்து செயல்படும்.
மதன் தாசுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பணியாற்றும் மிகச்சிறந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடைய எளிமையையும், மென்மையான பேச்சையும் அருகில் இருந்து பார்த்து நான் வியந்துள்ளேன். அவர் அமைப்பில் மிகச்சிறந்த மனிதராக இருந்தார். நானும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கணிசமான நேரத்தை செலவிட்டேன். எனவே, அமைப்பின் வளர்ச்சி மற்றும் தொண்டர்களின் வளர்ச்சி தொடர்பான அம்சங்கள் எங்கள் உரையாடல்களில் தவறாமல் இடம்பெறுவது இயல்பானதாகவே இருந்தது.
அர்ப்பணித்துக்கொண்டார்
அப்படி ஒரு உரையாடலின்போது, உங்களது பூர்வீகம் எந்த ஊர் என்று அவரிடம் நான் கேட்டேன். தான், மராட்டியத்தின் சோலாப்பூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தனது மூதாதையர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் என்னிடம் கூறினார். எனக்கு தேவி என்ற குடும்பப்பெயருடன் ஒரு ஆசிரியர் இருந்ததாகவும், அந்த ஆசிரியர் விஸ்நகரைச் சேர்ந்தவர் என்றும் நான் அவரிடம் கூறினேன். பின்னர் அவர் விஸ்நகர் மற்றும் வத்நகருக்கு பயணம் மேற்கொண்டார். எங்கள் உரையாடல்களும் குஜராத்தி மொழியில் அமைந்தன. பட்டய கணக்காளரான அவர், அந்த தொழிலின் மூலம் வசதியான வாழ்க்கையை வாழாமல் மனங்களைச் செதுக்குவதிலும், இந்தியாவின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதிலும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார்.
சிறு வயதில் மதன் தாசிடம் இருந்து பெற்ற வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்தால் பொது வாழ்க்கையில் உயர்ந்த பல தலைவர்களை என்னால் நினைத்துப்பார்க்க முடிகிறது. ஆனால் அதைப் பற்றி அவர் ஒருபோதும் பேசுவதில்லை. மதன் தாஸ் மக்களைப் புரிந்துகொள்வதிலும், அவர்களின் திறமைகளை எடைபோடுவதிலும் மிகச்சிறந்த நிபுணராக இருந்தார். மக்களின் திறமைகளைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் பணிகளை ஒதுக்கியதால் அவர் சிறப்பு வாய்ந்த நபராக இருந்தார். தமது தேவைகளுக்கு ஏற்ப மக்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஒருபோதும் ஏற்கவில்லை. அதனால்தான் எந்தவொரு இளம் தொண்டருக்கும் (ஆர்.எஸ்.எஸ். காரியகர்த்தா) ஒரு புதிய யோசனை இருந்தால், மதன் தாஸ் வெளிப்படையாக அதை ஏற்று வெளிப்படுத்தினார். அதனால் தான் அவருடன் பணியாற்றிய பலரும் அவரவர் பலத்தின் அடிப்படையில் முத்திரை பதித்தனர். எனவே, அவரது தலைமையின் கீழ் அமைப்புகள் பெருமளவில் வளர்ந்தன. அவை அளவில் பெரியதாக மாறிய போதும் அவை ஒற்றுமையாகவும் திறன் வாய்ந்ததாகவும் இருந்தன.
இந்தியா தன்னிறைவு
மதன் தாஸ் ஒரு அற்புதமான கல்வி பின்புலத்தை கொண்டிருந்தார். இந்த கல்வி அறிவு அவரது நுட்பமான பணி முறைகளை வடிவமைத்தது. மிகவும் ஆர்வமுள்ள புத்தக வாசகரான அவர், ஒரு நல்ல விஷயத்தை படிக்கும் போதெல்லாம், அதை அந்த துறையில் உள்ள சம்பந்தப்பட்ட நபருக்கு எடுத்துச்சொல்வார். இது போன்ற விஷயங்களை அடிக்கடி அவரிடம் இருந்து கேட்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் கொள்கை சார்ந்த விஷயங்களில் அவருக்கு மிக நல்ல புரிதல் இருந்தது. எந்த ஒரு நபரும் மற்றவர்களைச் சார்ந்திருக்காத, ஒவ்வொரு தனிநபரும் தங்கள் சொந்த காலில் நிற்கக்கூடிய, சுய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொண்ட இந்தியா அமைய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அதிகாரம் பெற்ற ஒரு இந்தியாவை அவர் கற்பனை செய்தார். பரஸ்பர மரியாதை, அதிகாரம் அளித்தல் மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகிய கொள்கைகளில் வேரூன்றிய ஒரு சமூகத்தை அவர் விரும்பினார். தற்சார்பு என்பது ஒரு குறிக்கோள் மட்டுமல்ல எனவும், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைக்கான யதார்த்தம் என்றும் மதன் தாஸ் நினைத்தார். இப்போது, பல்வேறு துறைகளில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ள நிலையில் அவரை விட வேறு யாரும் அதிக மகிழ்ச்சி அடைந்திருக்க முடியாது.
இன்று, நமது ஜனநாயகம் துடிப்பாக உள்ளது. இளைஞர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். சமூகம் தொலைநோக்கு பார்வையுடன் உள்ளது. தேசம் நம்பிக்கையால் நிரம்பி வழிகிறது. சேவைக்காகவும், தேசத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்காகவும் தங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த மதன் தாஸ் தேவி ஜி போன்றவர்களை இந்த சூழலில் நினைவுகூர்வது மிக முக்கியம்.