வீட்டுக்காவலுக்கு உதவும் கினிக்கோழிகள்: வளர்த்து விற்றால் நல்ல லாபம் ஈட்டலாம்
கினிக்கோழிகளுக்கு வீட்டுக் காவலுக்கு உதவும் குணமும் உண்டு. வெளி ஆட்களை கண்டால், வீட்டில் உள்ளவர்களை எச்சரிக்கும். அவற்றுக்கு சில வித்தியாசமான பண்புகளும் உள்ளன. இந்த கோழிகள் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. அதுபற்றிய தகவல்களை இ்ங்கே காணலாம்.
பயனுள்ள கினிக்கோழி
கினிக்கோழிகள் நிலங்களில் சிதறிக்கிடக்கும் தானியங்கள், புழுக்கள், உண்ணிகள் மற்றும் பூச்சிகளை சாப்பிட்டு வளரக்கூடியவை. அதனால், இவை புறக்கடையிலும், தோட்டத்திலும் வளர்க்கும்போது, கால்நடைகளுக்கு எதிரான பூச்சிகள், உண்ணிகளை தேடிப்பிடித்து தின்று விடுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன. கினிக்கோழிகள் அவை வளரும் இடம் வீடாகவோ, தோட்டமாகவோ, பண்ணையாகவோ இருந்தால், வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழைந்தால் பெருங்குரல் கொடுத்து, வீட்டு உரிமையாளரை எச்சரிக்கும் குணம் கொண்டவை. எனவே வீட்டை காவல் காப்பதில் நாய் குணம் இந்த கோழிகளுக்கும் உண்டு.
ரகங்கள்
கினிக்கோழியில் சிவப்பு தாடை மற்றும் நீல நிறத்தாடை என இரண்டு ரகங்கள் உள்ளன..
சிவப்புத்தாடை ரகம் 2 கிலோ எடை வரை வளரும். கால்கள் கருப்பு நிறத்துடனும், உடலின் இறகுகள் சாம்பல் நிறத்துடன் நீல நிறம் கலந்தும் காணப்படும். இறகுகளின் நுனியில் வெள்ளைப்புள்ளிகள் காணப்படும். மற்றொரு ரகத்தில் தாடை நீல நிறமாக இருக்கும். இறகுகள், கால்களின் நிறம் உள்பட மற்ற அம்சங்கள் சிவப்புத்தாடை ரகத்தை ஒத்திருக்கும்.
பொதுவாகவே, இவை காலில் உள்ள விரல்களால் கிளறாமல், வாயில் உள்ள அலகை கொண்டு எளிதில் எந்த ஒரு கடினமான பொருளையும், முதிர்ந்த இலைகளையும் கிழித்துவிடும். அலகால் தீவனத்தை அதிகமாக கிளறும் பழக்கம் இருப்பதால் தீவன தட்டுகளில் தீவனத்தை வைத்தால் கிளறி சிதறடித்துவிடும். எனவே, தீவனத்தை குறைந்த அளவில் தீவன தட்டுகளில் போட்டு உண்ண விடலாம்.
வளர்ப்பு முறை
கினிக்கோழிகளை வீட்டின் புறக்கடையில், தோப்புகளில், தோட்டங்களில் விட்டு வளர்க்கலாம். இவை புல், பூண்டு, புழு, பூச்சிகளை தின்று வளரும். வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கும் போது உயரமான மரக்கிளைகளில் இரவு நேரங்களில் அமர்ந்து கொள்ளும். இவற்றை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும்போது நிழலுக்கு ஒதுங்க, ஓய்வெடுக்க செலவு குறைவான கீற்று கொட்டகையை தோட்டத்தின் ஒரு பகுதியில் அமைக்கலாம். அவை குடிப்பதற்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
பொதுவாக, இவற்றை கொட்டகை அமைப்புடன் திறந்த வெளியில் வளர்ப்பதால் இவை சுற்றுப்புறத்தில் மேய்ந்து தீவனத்தை உண்ணும். கொட்டகை அமைப்பில் திறந்த வெளியின் நான்கு புறமும் கம்பிவலை அடித்து விட்டு மேல் புறமாக பறக்காமல் இருக்கவும் கம்பி வலை அடித்து விடலாம். 100 கினிக்கோழிகள் வளர்க்க 15 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட கொட்டகை போதுமானது. இவற்றை திறந்து விட்டு வளர்க்க 20 அடி நீளம் 20 அடி அகலம் கொண்ட திறந்தவெளி இருக்க வேண்டும்.
தீவனம்
கினிக்கோழிகளுக்கு என்று தனியாக தீவனம் கடைகளில் கிடைப்பதில்லை. கினிக்கோழிகள் நம் நாட்டின் கிராமப்புறங்களில் வீட்டுத் தோட்டங்களில் நாள் முழுவதும் வெளியே சுற்றித் திரிந்து தனது தீவனத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. ஒரு வளர்ந்த கினிக்கோழி ஒரு நாளைக்கு 200 கிராம் பசும் புற்களையும், களைகளையும் தீவனமாக உண்ணும். கினிக்கோழி குஞ்சுகள் நல்ல வளர்ச்சி பெறவும், குஞ்சுகளில் இறப்பை தடுக்கவும் கினிக்கோழி குஞ்சுகளுக்கு அதிக புரதச்சத்து கொண்ட தீவனம் தேவைப்படும். கடைகளில் கிடைக்கும் இறைச்சி கோழி தீவனத்தை கொண்டு நாமே அதிக புரதச்சத்து கொண்ட தீவனத்தை தயாரிக்கலாம்.
10 கிலோ ஆரம்ப தீவனத்துடன் 1 கிலோ எள்ளு பிண்ணாக்கும் ஒரு கிலோ உப்பு இல்லாத மீன் தூளையும் சேர்த்து கலந்து குஞ்சுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். இளம் குஞ்சுகளாக இருக்கும் சமயத்தில் தீவன தட்டுக்களில் தீவனத்தையும், தண்ணீர் தட்டுகளில் தண்ணீரையும் சேர்த்து கொடுத்து பழக்கப்படுத்தி விட வேண்டும்.
வளர்ந்த கினிக்கோழி குஞ்சுகளுக்கு தீவனம் போதுமான அளவு தோட்டத்தில் கிடைத்தால் தீவனம் போட வேண்டிய அவசியமில்லை. கினிக்கோழிகள் முட்டைகளை இடும் சமயத்திலும், மேய்ச்சல் குறைவாக உள்ள காலத்திலும் கோழித்தீவனம் 2 பங்கும் கோதுமை தவிடு 3 பங்கும், அரிசி தவிடு 3 பங்கும் கலந்து தீவனமாக கொடுக்க வேண்டும்.
இனப்பெருக்கம்
ஆண்-பெண் கினிக்கோழிகளை அவற்றின் சத்தத்தை வைத்து வேறுபடுத்தலாம். பெண் கினிக்கோழிகள் குரல் எழுப்பும் போது இருமுறை கத்தும். ஆண் கினிக்கோழிகள் ஒரு முறைதான் குரல் எழுப்பும். மழைக்காலங்களிலும், அதனை தொடர்ந்து வரும் பனிக்காலங்களிலும் அதிகமாக முட்டையிடும். ஒரு கினிக்கோழி ஒரு ஆண்டில் 100 முதல் 120 முட்டைகள் இடும். இதில் 75 சதவீத முட்டைகள் அடை முட்டையாக இருக்கும். சில பெண் கினிக்கோழிகள் அடைகாப்பதில் ஈடுபாடு காட்டுவதில்லை. அதனால், பெண் கினிக்கோழிகளுக்கு பதிலாக அடைகாக்கும் பருவத்தில் இருக்கும் நாட்டுக் கோழிகளை வைத்து கினிக்கோழி முட்டைகளை அடைகாக்கலாம் அல்லது இன்குபேட்டர் கருவி கொண்டும் குஞ்சு பொரிக்கலாம்.
குஞ்சுகள் பராமரிப்பு
பொரித்த ஒரு கினிக்கோழி குஞ்சின் எடை 17 முதல் 20 கிராம் இருக்கும்.
குஞ்சுகளை பூனை, நாய் போன்ற பிராணிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். 2 மாதம் அடைந்தபின் வெளியே மேய்ந்து தீவனம் எடுக்க அனுமதிக்கலாம்.
கினிக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தாலும், வெள்ளைக்கழிச்சல் என்னும் ராணிக்கெட், ஈ கோலி, ரத்தக்கழிச்சல் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
விற்பனை
கினிக்கோழிகள் 12 வார வயதில் 1.1 முதல் 1.3 கிலோ வரை உடல் எடை அடையும். இந்த சமயத்தில் அவற்றை இறைச்சிக்காக விற்று விடலாம். நல்ல லாபமும் கிடைக்கும்.