நிறைமதியும்.. சித்திரையும்..
சித்ரா பவுர்ணமி நாள், நாம் அனைவரும் அறிந்த நாளாகும். சித்திரை மாதத்தில் அமைகின்ற நிறைமதி நாளினை அதாவது முழுமதி நாளினைக் குறிக்கும் சொல்லே சித்ரா பவுர்ணமி என்பதாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய முழுநிலவு நாளினை சமய அடிப்படையில் விழா எடுத்து கொண்டாடும் நிகழ்வு தமிழர் வாழ்வியல் மரபாக உள்ளது.
சித்ரா பவுர்ணமி விழா சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடப்படுகின்றது. அன்றைய நாளில் சந்திரன், சித்திரை நட்சத்திரத்திலோ அதனை அடுத்து நகரும்போதோ நிகழ்த்தப்படும். தமிழகத்தில் சித்திரை முழு நிலவு நாளில் இவ்விழா கொண்டாடப்பட்டதை சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ்க்காப்பியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
முத்தமிழ்க் காப்பியமான சிலம்பு, சோழர் தலை நகரமான காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா என்ற பெயரில் இவ்விழா 28 நாட்கள் கொண்டாடப்பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
அக்காலத்தே மதுரை மாநகரில் சித்திரைத் திருவிழா என்ற பெயரில் மிகச்சிறப்பான திருவிழா கொண்டாடப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரையில் நடைபெறும் இவ்விழா திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.
இவ்விழா நடைபெறும்போதே மீனாட்சி அம்பாளின் திருமண விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து கள்ளழகர் சீரோடு வந்து வைகை ஆற்றில் இறங்கும் காட்சி லட்சக்கணக்கானோர் கண்டு களிக்கும் வண்ணம் இன்றும் நடைபெறுகிறது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திரு விளையாடல் புராணம், மதுரை சொக்கநாதப் பெருமானை சித்திரை முழு நிலவு நாளில் அர்ச்சனை செய்து பூசித்து வழிபடுவோர், ஆண்டு முழுவதும் பூஜை செய்த பயனைப் பெறுவார்கள் என்று குறிப்பிடுகிறது.
மழைக்காலம் அல்லாமல் பகல் பொழுதின் வெப்பம் தணிந்து இனிய தென்றல் வீசும் வேனிற்கால பவுர்ணமி நாளை தமிழ் மக்கள் பண்டுதொட்டே கொண்டாடி வந்துள்ளனர். வேளாண் தொழிலை நிறைவு செய்த மக்கள் ஓய்வு காலமான சித்திரை மாத பூரண நாளினை சித்ரா பவுர்ணமி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் அந்தந்த ஊர் மக்களால் பொது விழாவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. சித்திரை தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகக் கருதப்படுவதால் அம்மாத முழுநிலவு நாளில் நடை பெறும் இவ்விழா சிறப்பு பெறுகின்றது.
சித்ரா பவுர்ணமி அன்று எல்லா நலமும் வளமும் தரவல்ல இந்திரனை வழிபாடு செய்வது வழக்கில் உள்ளது. இந்திரன் முதலிய தேவர்களை மருக் கொழுந்து சாத்தி வழிபாடு செய்வது நல்லது என்றும், அதுவும் சனி, ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் அமைவது சிறப்பானது என்றும் கருதப்படுகிறது. மேலும் இவ்விழா சித்திரபுத்திரனை நினைத்துக் கொண்டாடப்படுவதாகப் புராண வரலாறு கூறுகின்றது.
சித்திரபுத்திரன், ஆன்மாக்கள் செய்கின்ற அற, மறச்செயல்களை எமனுக்கு கணக்கெழுதி காட்டுபவன் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய நாளில் மக்கள் தம் இல்லங்களைத் தூய்மை செய்து நோன்பு இருப்பர். பொன், வெள்ளி, செம்பு போன்றவற்றால் ஆன சித்திர புத்திர படிமங்களில் அவனை எழுந்தருளச்செய்து வழிபாடு செய்வர். இந்த வழிபாட்டின் போது மாங்காய், தேங்காய் போன்றவற்றை கொத்தோடு வைத்தும் பால், நெய், எள்ளுருண்டை பொங்கல் முதலியன படைத்தும், சித்திர புத்திரன் கதை நூலினைப் படித்தும் கதைகூறியும் வழிபாடு செய்து பாயசம் வழங்குவர். இந்நோன்பு நாளில் நோன்பு இருப்பவர் உப்பு இல்லா உணவு உண்பது மரபாகும்.
முதலில் இந்நோன்பு தொடங்குபவர் ஐந்து அல்லது ஒன்பது கலசங்கள் வைத்து அவற்றில் சித்திரபுத்திரனையும் ஏனைய எட்டு திக்பாலர்களையும் இருக்கச் செய்து கண்ணன் பிறப்பு அன்று எவ்வாறு கண்ணன் காலடிகளை வாசலில் இருந்து பூஜை அறை வரை கோலமிடுவார்களோ அதே போல சித்திர புத்திரரின் காலடிகளை வாசலில் இருந்து இல்லத்தினுள் வரைவார்கள். இதன் மூலம் அவன் உள்ளே வருவதாக ஐதீகம். கோலத்தின் நடுவேயும் சித்திரபுத்திரன் படம் வரைந்து தானங்கள் அளித்து வழிபாடு செய்வர். இன்றும் கிராமப் புறங்களில் இவ்விழா இதுபோல் நடைபெறுவதைக் காணலாம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை மலர்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் சித்ரா பவுர்ணமி நாளை ஒட்டி நடைபெற்ற இந்திர விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் சித்திரை மாத நிறைமதி நாளில் காவிரிபூம்பட்டினத்தில் தமிழக அரசு இலக்கிய விழா எடுத்து சிறப்பித்து வருகிறது.