தங்கக் கடத்தலை தடுக்க முடியுமா?

சட்டபூர்வமாக நேரடியாக இறக்குமதி செய்யும் போது சுங்க வரியாக அதிக தொகை செலுத்த வேண்டிய இருப்பதால், அதை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ரகசியமாக தங்கத்தை கடத்திக்கொண்டு வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது.

Update: 2023-08-27 10:04 GMT

 மக்களின் வாழ்க்கையுடன் இரண்டற கலந்துவிட்ட உலோகம். இதற்கு நேரடி பயன்பாடு இல்லை என்றாலும் மதிப்பு மிக்கது. எத்தனையோ உலோகங்கள் இருந்தாலும் தங்கத்துக்கு இருக்கும் வரவேற்பும், மரியாதையும் வேறு எதற்கும் கிடையாது. குழந்தையை கொஞ்சும் போது கூட, 'என் தங்கமே' என்று கொஞ்சுகிறார்கள். பொன்னுசாமி, தங்கப்பாண்டி, பொன்னம்மாள், தங்க லட்சுமி என்று தங்கத்தையே பெயராக சூட்டும் வழக்கமும் சமுதாயத்தில் உள்ளது.

நல்ல மனிதர்களை 'தங்கமான மனிதர்' என்று சொல்வது போல், செழிப்பான காலத்தை 'பொற்காலம்' என்கிறோம். அந்த வகையில் எல்லா இடத்திலும் தங்கத்துக்கு உயர்ந்த அந்தஸ்துதான்.

தங்கத்தை விட வைரம், பிளாட்டினம் விலை உயர்ந்தது என்றாலும், தங்கத்தை எப்போது வேண்டுமானாலும்-யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்து பணமாக்கிக் கொள்ள முடியும் என்பதால் மக்கள் தங்கத்திலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். கையில் பணமாக வைத்திருந்தால் செலவாகிவிடும் என்று கருதி மக்கள் தங்கத்தை நகைகளாக வாங்கி வைக்கிறார்கள். மேலும் தங்கத்தின் மதிப்பு குறையப்போவது இல்லை. அதன் விலை ஏறுமுகமாகவே இருப்பதால் லாபம் தரும் நல்ல முதலீடாகவும் விளங்குகிறது.

ஒரு குடும்பத்தின் செல்வச் செழிப்பையும், அந்தஸ்தையும் மதிப்பிட உதவும் ஒரு காரணியாகவும் தங்கம் விளங்குகிறது.

தங்கத்தின் தேவையும், தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் அதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1923-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாய்தான். ஆனால் இப்போது அதன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா. ஆனால் நம் நாட்டில் குறைந்த அளவு தங்கமே கிடைக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு தேவை அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

2020-2021-ம் நிதியாண்டில் 34.62 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). 2021-2022-ல் 46.14 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட 33.34 சதவீதம் அதிகம் ஆகும். தங்கத்தின் இறக்குமதிக்காக அதிக அளவில் அன்னிய செலாவணி ஆவதால் 2019-2020-ல் 102.6 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறை 2020-2021-ல் 192.41 பில்லியன் டாலராக அதிகரித்தது.

இறக்குமதி அதிகரிப்பது போல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நகைகளின் மதிப்பும் அதிகரிக்கத்தான் செய்கிறது. 2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 7.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 2019-ம் ஆண்டில் 12.4 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஏற்றுமதி செய்யப்படும் நகைகளில் பாதிக்கும் மேற்பட்ட நகைகள் திருமண நகைகள்தான்.

இந்தியாவில் தங்கத்தின் தேவையை பொறுத்தமட்டில், தென்மாநிலங்களின் தேவை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. நகரங்களை விட கிராமப்புறங்களில்தான் தங்கத்தின் பயன்பாடு அதிகம் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது. அத்துடன் 3 சதவீதம் ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி உயர்வு தங்கநகை விற்பனையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமைந்தது.

சட்டபூர்வமாக நேரடியாக இறக்குமதி செய்யும் போது சுங்க வரியாக அதிக தொகை செலுத்த வேண்டிய இருப்பதால், அதை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ரகசியமாக தங்கத்தை கடத்திக்கொண்டு வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா காலத்தில் விமான போக்குவரத்து முடங்கியதாலும், மேலும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் தங்க கடத்தல் சற்று குறைந்து இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் கடத்தல்காரர்கள் முழுவீச்சில் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

2019-2020-ம் நிதி ஆண்டில் அதிகபட்சமாக டெல்லி விமானநிலையத்தில் 494 கிலோ தங்கமும், மும்பை விமானநிலையத்தில் 403 கிலோ தங்கமும், சென்னையில் 392 கிலோ தங்கமும் பிடிபட்டது. கொரோனா உச்சத்தில் இருந்த 2020-2021-ம் ஆண்டில் சென்னையில் 150 கிலோவும், கோழிக்கோட்டில் 146.9 கிலோவும், மும்பையில் 87 கிலோவும், டெல்லியில் 84.8 கிலோவும் சிக்கியது.

இந்தியாவில் தங்க கடத்தலின் மையமாக மும்பை விமானநிலையம் விளங்குகிறது. அங்கு 2022-ம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் மட்டும் ரூ.360 கோடி மதிப்புள்ள 604 கிலோ தங்கம் பிடிபட்டு இருக்கிறது. (இது, அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் பிடிபட்டதை விட 91 கிலோ அதிகம் ஆகும்.)

மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி விமானநிலையத்தில் 374 தங்கமும், சென்னை விமானநிலையத்தில் 306 கிலோ தங்கமும், கோழிக்கோடு விமானநிலையத்தில் 91 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சமீப காலமாக ஐதராபாத் விமானநிலையம் வழியாக கடத்துவதும் அதிகரித்து இருக்கிறது.

தங்கம் விற்பனையில் மும்பை மிகப்பெரிய சந்தையாக விளங்குவதால் நகை வியாபாரிகள், பைனான்சியர்கள் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து கடத்தலில் ஈடுபடுவதாக சுங்க இலாகா அதிகாரிகள் கூறுகின்றனர்.

நமது அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் வங்காளதேசத்தின் வழியாகவே அதிக அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுகிறது. 2021-2022-ம் நிதி ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் 73 சதவீதம் இந்த நாடுகள் வழியாக கடத்தி வரப்பட்டவை என்ற தகவலை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

விமானநிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கம் கடத்தி வருவதை கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் அண்டை நாடுகளான மியான்மர், வங்காளதேசம், பூடான், நேபாளத்தில் இருந்து தரைமார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த நாடுகளுடன் நீண்ட எல்லைப்பகுதி உள்ளதால் சாலை மார்க்கமாக மட்டுமின்றி காடுகள் வழியாகவும் கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதால் கடத்தல்காரர்கள் எளிதில் சிக்குவது இல்லை.

2022-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தங்க கடத்தல் 33 சதவீதம் அதிகரித்து 160 டன்னை எட்டியதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது. சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்படும் தங்கத்தில் வெறும் 2 சதவீதம் மட்டுமே பிடிபடுவதாகவும் அந்த கவுன்சில் கூறுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் ஆண்கள் 20 கிராம் தங்கம் கொண்டு வரலாம். பெண்கள் என்றால் 40 கிராம் கொண்டு வரலாம். இதற்கு அதிகமாக யாராவது தங்கம் கொண்டு வந்தால் அது கடத்தல் தங்கமாக கருதப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

பொம்மை, காலணி, கம்ப்பூட்டர், செல்போன், சூட்கேஸ், நூதனமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டில் மறைத்து வைப்பது; சிறிய மாத்திரை வடிவில் செய்து விழுங்கி வயிற்றில் மறைத்து வைப்பது; ஆசனவாயில் மறைத்து வைப்பது; தூள் அல்லது பசை வடிவில் துணுக்குகளாக மாற்றி சோப்புடன் கலந்து வைப்பது என விதவிதமான வழிகளில் தங்கத்தை கடத்துகிறார்கள்.

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுகிறது. குறிப்பாக திருச்சூர், கொடுவல்லி, வெங்காரா ஆகிய ஊர்களுக்கு கடத்தல் தங்கம் அதிகமாக வருவதாகவும், இங்கிருந்து கேரளாவின் மற்ற பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தங்கம் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொடுவல்லியில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்குள் மட்டும் 200 நகைக்கடைகள் உள்ளன.

3 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த ஒரு கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலக முகவரிக்கு வந்த ஒரு பார்சலை சுங்க இலாகா அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதில் ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க கடத்தலில் அரசு மட்டத்தில் உள்ள சில பெரிய தலைகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கடத்தல் தொடர்பாக சுவப்னா சுரேஷ் என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்ததாக முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். 16 மாத சிறைத்தண்டனைக்கு பின் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவப்னா சுரேஷ் விடுதலையானார்.

2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை கிட்டத்தட்ட 4,000 கிலோ தங்கம் இந்தியாவுக்கு கடத்தி கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதில் 63 சதவீத கடத்தல்கள் விமானநிலையங்கள் வழியாகவே நடைபெற்று உள்ளன. கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக விமான போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் விமானநிலையங்களின் ஊழியர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தங்க கடத்தல் குற்றத்துக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கும் குறைவான தங்கத்தை கடத்திக் கொண்டு வந்து பிடிபட்டால் அவர்கள் எளிதில் ஜாமீனில் விடுதலையாகி விட முடியும். எனவே இதை சாதகமாக பயன்படுத்தி கடத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஒரு கோடி ரூபாய்க்கு சற்று குறைவான மதிப்புள்ள தங்கத்தையே கடத்திக்கொண்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்க கடத்தலில் 15 முதல் 20 சதவீதம் வரை லாபம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

தங்க கடத்தலில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்தான் என்றாலும் நைஜீரியா, சூடான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்களும் கடத்திக் கொண்டு வருகிறார்கள். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 20 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 720 டன் தங்கம் கொண்டு வரப்படுவதாகவும், இதில் 380 டன் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும், மீதி 340 டன் கடத்தப்பட்டு கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் தேவை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. அதேசமயம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் அதிகமாக உள்ளது. இதனால்தான் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வருவது அதிகமாக நடைபெறுகிறது. இது அரசுக்கு ஒருபுறம் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் கடத்தலையும் முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதற்கான தீர்வு என்ன?

இது விடை காண முடியாத கேள்வியாகவே நீடிக்கிறது.

தங்க பஸ்பம் சாப்பிட்டால்...

* தங்கம் 'காரட்' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்த தங்கம் ஆகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன.

* 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு அல்லது வெள்ளி கலந்தது. 18 காரட் ஆபரணத்தில் 75 சதவீத தங்கமும், 14 காரட் ஆபரணத்தில் 58.5 சதவீத தங்கமும், 9 காரட் ஆபரணத்தில் 37.5 சதவீத தங்கமும் இருக்கும். காரட்டின் அளவு குறைய குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும்.

* மஞ்சள் நிற உலோகமான தங்கத்துடன் சேர்க்கப்படும் வெள்ளி அல்லது செம்புக்கு ஏற்ப தங்கத்தின் மதிப்பு அமைகிறது.

* நீரை விட 19 மடங்கு எடையுள்ள தங்கம் ஏ.யு. என்ற குறியீட்டினால் குறிப்பிடப்படுகிறது.

* வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தும் திறன் கொண்ட தங்கம் துருப்பிடிக்காது. காற்றில் இதன் நிறம் மங்காது. இதனால் எப்போதும் பளபளப்பாகவே இருக்கும்.

* ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும், 3 பங்கு ைஹட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த ராஜ திரவத்தில் மட்டுமே தங்கம் கரையும்.

* 'இன்ப்ரா ரெட்' கதிர்களை (அகச்சிவப்பு கதிர்கள்) தெறிக்கவிடும் ஆற்றல் தங்கத்துக்கு இருப்பதால் வெப்ப தடுப்பு உடைகள், சூரிய கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

* 1,064.18 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தங்கம் உருகும். இதை கம்பியாகவும், தகடாகவும் மாற்ற முடியும்.

* தூய தங்கம் நச்சுத்தன்மையற்றது என்பதால் உணவு அருந்த தங்கத்தட்டு, தங்க இலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பேனா நிப், கைக்கெடிகார பாகங்கள் ஆகியவை தங்கத்தால் செய்யப்படுகின்றன.

* தங்கபஸ்பம் சாப்பிட்டால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது.

அமெரிக்காவிடம் அதிக தங்கம்

உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளன. 2021-ம் ஆண்டில் சீனாவில் 673 டன் நகைகள் வாங்கப்பட்டு இருப்பதாகவும், இந்தியாவில் 611 டன் தங்க நகைகள் வாங்கப்பட்டு இருப்பதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.

இந்த பட்டியலில் அமெரிக்கா 3-வது இடத்தில் உள்ளது. என்றாலும் உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் தங்கத்தின் விலை குறைவாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் அதிக சுரங்கங்கள்

தங்கத்தின் உற்பத்தியிலும் வினியோகத்திலும் சிறந்து விளங்கும் தென்ஆப்பிரிக்காவில் அதிக அளவில் தங்கச்சுரங்கங்கள் உள்ளன. இன்று உலக நாடுகளில் புழக்கத்தில் உள்ள தங்கத்தில் 50 சதவீதம் தென்ஆப்பிரிக்காவில் உள்ள சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்பட்டதுதான். 1970-ம் ஆண்டில் மட்டும் இங்கு 1,480 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது. இது அந்த ஆண்டில் உலகின் மொத்த உற்பத்தியில் 79 சதவீதம் ஆகும்.

2014-ம் ஆண்டின் நிலவரப்படி, பூமிக்கு அடியில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 600 டன் தங்கம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டு இருக்கிறது. இதன் மதிப்பு 6.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

1905-ம் ஆண்டு முதல் தங்கம் உற்பத்தியில் முன்னணி பெற்று விளங்கிய தென்ஆப்பிரிக்காவை 2007-ம் ஆண்டில் சீனா பின்னுக்கு தள்ளியது. அந்த ஆண்டில் சீனாவில் 276 டன் தங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.

தங்கம் அதிக அளவில் தோண்டி எடுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, ரஷியா, கனடா, பெரு, கானா, மாலி, புர்கினா பாசோ, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் ஆகியவையும் உள்ளன.

நம் நாட்டில் அதிக அளவில் தங்கம் பயன்படுத்தப்பட்டாலும் குறைந்த அளவு தங்கமே கிடைக்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. 2019-2020-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து 1,742 கிலோ தங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. இது 2021-2022-ம் ஆண்டில் 1,251 கிலோவாக குறைந்துவிட்டது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் சுரங்கத்தில் நீண்டகாலமாக தங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கு தங்கம் இருப்பு வெகுவாக குறைந்ததால் 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த சுரங்கம் மூடப்பட்டு விட்டது. இந்த மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி சுரங்கம்தான் தற்போது இந்தியாவில் உள்ள பெரிய தங்க சுரங்கம் ஆகும்.

இலங்கையில் இருந்து கடத்துவது எப்படி?

தமிழகத்துக்கு ஆகாய மார்க்கமாக மட்டுமின்றி, கடல் வழியாகவும் தங்கம் கடத்தப்படுகிறது. குறிப்பாக அண்டை நாடான இலங்கை மிக அருகில் இருப்பதால், அங்கிருந்து கடல் வழியாக அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது.

இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையேயான தூரம் வெறும் 31 கிலோ மீட்டர்தான். இதை சாதகமாக பயன்படுத்தி அந்த வழியாக தங்கத்தை கடத்திக்கொண்டு வருகிறார்கள். என்னதான் கடலோர காவல்படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கண்காணித்த போதிலும் கடத்தலை முற்றிலுமாக தடுக்க முடிவதில்லை.

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு அங்கிருந்து தமிழகத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் வணிக கப்பல்கள் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து அங்கு வரும் கப்பல் மற்றும் விமானங்களில் தங்கம் மற்றும் பொருட்களை கொண்டு வருவதற்கு பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இதனால் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இலங்கைக்கு கடத்தி வந்து அங்குள்ள இடைத்தரகர்கள், ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் மீன்பிடி படகில் பதுக்கி வைத்து, அங்கிருந்து இலங்கை கடல் எல்லை வரை கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய படகு நிற்கும் இடத்தை ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் அறியும் தமிழகத்தைச் சேர்ந்த கும்பல், இங்கிருந்து ஒரு படகில் சென்று தங்கக்கட்டிகளை தங்கள் படகுக்கு மாற்றி கொண்டு வந்துவிடுகிறது. கச்சிதமாக திட்டமிட்டு மின்னல் வேகத்தில் இந்த காரியத்தை செய்து முடிப்பதால் அவர்கள் எளிதில் சிக்குவது இல்லை. இப்படி நடக்கும் 10 கடத்தல் சம்பவங்களில் ஒன்றில்தான் கடத்தல்காரர்கள் சிக்குவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் 6-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லை முடிவடைகிறது. மணல் திட்டுகள் உள்ளதாலும், ஆழம் குறைவாக இருப்பதாலும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் பெரிய ரோந்து கப்பல்கள் அந்த பகுதியில் அதிகமாக ரோந்து வருவது கிடையாது. மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய 'ஹோவர் கிராப்ட்' கப்பல்கள்தான் இந்த மணல் திட்டுகள் வரை ரோந்து செல்லும். இதை கடத்தல்காரர்கள் சாதகமாக பயன்படுத்தி தங்கத்தை கடத்தி வருவதோடு தமிழகத்தில் இருந்து கஞ்சா, பீடி இலை போன்றவற்றை இலங்கைக்கு கடத்துகிறார்கள்.

சில சமயங்களில் பாதுகாப்பு படையினர் விரட்டி வரும் போது, கடத்தல்காரர்கள் தங்கக் கட்டி பார்சல்களை கடலில் தூக்கி வீசிவிட்டு கண்இமைக்கும் நேரத்தில் தப்பி விடுகிறார்கள். அப்போது ஜி.பி.எஸ். கருவி மூலம் அந்த இடத்தை பதிவு செய்துகொள்கிறார்கள். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த இடத்துக்கு சென்று கடலுக்குள் மூழ்கி அந்த பார்சல்களை எடுத்து வந்துவிடுகிறார்கள்.

இப்படி தங்கக்கட்டி பார்சல்களை கடலுக்குள் வீசிவிட்டு தப்ப முயற்சிக்கும் போது சில சமயங்களில் கடத்தல்காரர்களை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து விடுகிறார்கள். தங்கக்கட்டிகள் வீசப்பட்ட இடத்தை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்து 'ஸ்கூபா டைவிங்' நீச்சல் பயிற்சி பெற்ற கடலோர காவல்படை வீரர்களின் உதவியுடன் அவற்றை மீட்கிறார்கள். கடந்த 5 மாதங்களில் கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட 54 கிலோ தங்கக்கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு இருக்கிறார்கள்.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்; இலங்கையில் இருந்து ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்து தமிழகத்தில் விற்றால் கடத்தல்காரர்களுக்கு லட்சக்கணக்கில் லாபம் கிடைப்பதாகவும், 10 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்து விற்றால் சுமார் ரூ.1¼ கோடி வரை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். படகில் சென்று தங்கத்தை கடத்தி வருபவர்களில் பலர் அப்பாவிகள் என்றும், பண ஆசை காட்டி அவர்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

தீவுகளில் பதுக்குகிறார்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் அருகே உள்ள சிங்கலித்தீவு, குருசடைதீவு தீவு முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இதில் சிங்கலி தீவு, குருசடைதீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி, முயல் தீவு, பூமர்ச்சான் உள்ளிட்ட 13 தீவுகள் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள தீவுகள் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன.

இங்கு ஆட்கள் செல்ல முடியாது என்பதால், இந்த தீவுகளை கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது மீன் பிடிக்கச் செல்வது போல் படகுகளில் கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்றவற்றை கொண்டு சென்று ஏதாவது ஒரு தீவில் உள்ள புதருக்குள் மறைத்து வைத்து விடுகின்றனர். பின்னர் தக்க சமயம் பார்த்து அங்கிருந்து இலங்கைக்கு கடத்தி விடுகிறார்கள். இவர்களே தங்கக் கடத்தலுக்கும் உடந்தையாக இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்