வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்த புதிய ரக கரும்பு, பயறு, அவரை, துவரை

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் 2023-ம் ஆண்டுக்கான புதிய ரகங்களை வெளியிட்டுள்ளது.;

Update:2023-06-08 18:05 IST

பாசிப்பயறு கோ-9

அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது. ஹெக்டேருக்கு 825 கிலோ மகசூல். ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை உள்ளதால் எந்திர அறுவடைக்கு ஏற்றது. பளபளப்பான பருமனான விதைகள் கொண்டது. மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலைச்சுருள் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது.

பாசிப்பயறு வம்பன்-6

நெல் தரிசில் பயிரிட ஏற்றது. ஹெக்டேருக்கு 760 கிலோ மகசூல் கிடைக்கும். ஒருமித்த முதிர்ச்சி அடையும் தன்மை, காய்கள் வெடிக்காதவை மற்றும் ஒற்றை அறுவடைக்கு ஏற்றது. பளபளப்பான விதைகள், காய்த்துளைப்பான் மற்றும் வெள்ளை ஈ பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. மஞ்சள் தேமல், சாம்பல் மற்றும் இலைச்சுருள் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறனுடையது.

தட்டைப்பயறு வம்பன்-4

ஆடிப்பட்டமான ஜூன், ஜூலை, புரட்டாசி பட்டமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பயிரிட ஏற்றது. இறவையாக ஹெக்டேருக்கு 1377 கிலோ மற்றும் மானாவாரியாக 1035 கிலோ மகசூல் கிடைக்கும். ஒருமித்து பூ பூக்கும் மற்றும் முதிர்ச்சியடையும் தன்மை, பெரிய அளவிலான விதைகள், அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து கொண்டது. காய்துளைப்பான் மற்றும் தேமல் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடையது.

சூரியகாந்தி கோ.எச்.-4

ஆடிப்பட்டம் மற்றும் மார்கழி பட்டங்களில் பயிரிடலாம். இறவையாக ஹெக்டேருக்கு 2182 கிலோ மற்றும் மானாவாரியில் ஹெக்டேருக்கு 1898 கிலோ மகசூல் கிடைக்கும். சாறு உறிஞ்சும் பூச்சி, இலை உண்ணும் பூச்சி, சாம்பல் நோய் மற்றும் ஆல்டர்னேரியாவுக்கு எதிராக மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.

என்.வி.ஆர்.ஐ. எள்-5

தை, மாசி மற்றும் சித்திரை பட்டங்களில் பயிரிடலாம். ஹெக்டேருக்கு 795 கிலோ மகசூல் கிடைக்கும். கிளைகள் அற்ற எள் வகை என்பதால் நேரடி அடர் விதைப்புக்கும், எந்திர அறுவடைக்கும் ஏற்றது. வெள்ளை நிற எள்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய் துளைப்பான், வேர் அழுகல், பூவிதழ் மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது.

கரும்பு கோ-18009

டிசம்பர் முதல் மார்ச் நடு மற்றும் பின்பட்டங்களில் பயிரிடலாம். ஹெக்டேருக்கு கரும்பு மகசூல் 160.29 டன் கிடைக்கும். வெல்லம் காய்ச்ச ஏற்ற ரகம். வறட்சியை தாங்கி வளரும். இடைக்கணு புழு தாக்குதல் மற்றும் செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புள்ள ரகம்.

பீர்க்கங்காய் மதுரை-1

ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர்ப்பாசன நிலையில் சாகுபடி செய்ய ஏற்றது. ஹெக்டேருக்கு 18.75 டன் மகசூல் கிடைக்கும். காய்கள் நடுத்தர அளவு கொண்டது. நான்கு மாதங்களில் 10 முதல் 15 டன் அறுவடை கிடைக்கும்.

மார்கழி மல்லிகை கோ-1

ஜூன், ஜூலை மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிடலாம். வணிக ரகங்களின் பருவமில்லா காலத்தில் அதிக அளவு மலர்கள் கிடைக்கும். மலர் மொட்டுகள் தடிமனாகவும் பளிச்சென்றும் இருக்கும். மிதமான நறுமணம் கொண்டது. செம்போன் தாக்குலுக்கு உட்படாதது. இலைப்புள்ளி நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் உள்ளது.

குத்து அவரை கோ-16

ஜூன், ஜூலை மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிடலாம். ஹெக்டேருக்கு 16.5 டன் மகசூல் கிடைக்கும். ஒளி உணர்திறன் இல்லாத ரகம் என்பதால் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். முதல் அறுவடை 50 முதல் 55 நாட்களில் செய்யலாம். நான்கு மாதங்களில் 12 முதல் 15 அறுவடைகள் செய்யலாம்.

இலவம்பஞ்சு எம்.டி.பி.-1

அனைத்து பருவங்களிலும் பயிரிடலாம். ஒரு மரத்தில் இருந்து 900 முதல் 1500 காய்கள் கிடைக்கும். மானாவாரி மற்றும் தோட்ட நில வேளாண் காடுகளுக்கு ஏற்றது. காய்கள் நடுத்தரமானது. அதிகமான பஞ்சு எடை உடையது. பெரிய அளவில் பூச்சி தாக்குதல் இல்லை.

சவுக்கு எம்.டி.பி.-3

ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஹெக்டேருக்கு சுமார் 160 டன் மகசூல் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்