உறவை வளர்க்கும் 'பெட்டி சோறு' விருந்து

விருந்தோம்பல் எனும் உயர்ந்த பண்பை உயிராக மதிப்பவர்கள் தமிழர்கள். வீட்டுக்கு விருந்தினர் வந்தால் உள்ளன்போடு கவனிக்கும் பண்பு தமிழர்களின் சொத்து என்றால் அது மிகையல்ல.

Update: 2023-04-14 06:43 GMT

பரம எதிரி வந்தால் கூட குடிக்க தண்ணீர் கொடுத்து அவரின் உடலையும், மனதையும் குளிர வைப்பது தமிழரின் வழக்கம். இத்தகைய உபசரிப்பால் வன்மம் மறைந்து உறவு துளிர்விட்ட பல கதைகளை அறிந்து இருப்போம்.

குடும்பத்தினர் மட்டுமின்றி சுற்றத்தாரையும் உறவுகளாக நினைத்து விருந்து அளிப்பது தமிழ் பண்பாட்டின் உச்சம். திருமணம், பூப்புனித நீராட்டு, புதுமனை புகுவிழா உள்பட வீட்டு விசேஷங்கள் அனைத்திலும் உறவினர்களுக்கு இணையாக சுற்றத்தாருக்கும் விருந்து அளித்து மகிழ்வார்கள். வீட்டு விழாக்களில் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்படும். விழாக்களுக்கு செல்லும் நாம் பந்தியில் அமர்ந்து வயிறு புடைக்க உண்டு களித்து திரும்புவோம்.

இந்த பந்தி நிறைவுபெற்றதும் விருந்து உபசரிப்பும் முடிந்து விட்டதாக நினைத்து விடுகிறோம். ஆனால் அதன்பின்னரும் மறைமுகமாக ஒருவகை விருந்து நடக்கிறது. அதாவது வீட்டு விசேஷங்களுக்கு வர இயலாமல் வீடுகளிலேயே இருப்பவர்களுக்கும் உணவு வகைகளை கொடுத்து அனுப்பி சாப்பிட வைக்கின்றனர். இதற்கு தென்மாவட்டங்களில் "பெட்டி சோறு" என்று கூறுகின்றனர்.

பண்டைய காலத்தில் கேழ்வரகு, கம்பு கூழ், சோள சாதம் தான் வீடுகளில் பிரதான உணவாக இருந்தது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் அரிசி சாதத்துடன் அறுசுவை உணவு விருந்தாக பரிமாறப்படும். இதனால் குடும்ப விழாக்களில் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் நடக்க இயலாத முதியவர்கள் மட்டுமின்றி இளம்பெண்கள், விதவைகள் வெளியே வருவதை தவிர்ப்பதோடு, குடும்ப விழாக்களுக்கு வருவதும் அரிதாக இருந்தது.

வீடுகளில் முடங்கி கிடக்கும் அவர்களும் அறுசுவை உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக திருமணம், பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழாக்களில் பந்தி முடிந்ததும் வீடுகளுக்கு உணவு வழங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். அதுவும் முந்தைய காலத்தில் நார் பெட்டியில் சாதத்தையும், பாத்திரங்களில் குழம்பு, பொரியலை வாங்கி சென்றதால் பெட்டி சோறு என்று அழைத்து உள்ளனர்.

நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் பெட்டி சோறு வழங்கும் பழக்கம் தென்மாவட்டங்களில் இன்றும் நடக்கிறது. இந்த பெட்டி சோறு வழங்க வேண்டும் என்பதற்காகவே கூடுதலாக உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெட்டி சோறு மிகவும் பிரபலம்.

இந்த நடைமுறை ஒருசில ஊர்களில் ஊர் விருந்து என்று மாறிவிட்டது. ஊர் விருந்துக்கு தனியாக நேரம் ஒதுக்கி விடுகின்றனர். அந்த நேரத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் சென்று சாப்பிடுகின்றனர். ஒருசிலர் மட்டும் உணவு வாங்கி செல்கின்றனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒருசில திருமண விழாக்களில் கவுரவமாக நினைத்து சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, அசைவ உணவு பரிமாறப்படுகிறது. அதை பெட்டி சோறாக வாங்கி செல்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதேபோல் திருமண மண்டபங்களில் பலர் குடும்ப விழாக்களை நடத்துகின்றனர். எனவே அங்கிருந்து வீட்டுக்கு உணவு வாங்கி செல்வது இல்லை.

இதனால் பெட்டி சோறு வழங்கும் வழக்கம் மெல்லமெல்ல குறைந்து வருவதாக கூறுகின்றனர். அதேநேரம் விழாவுக்கு வந்தவர்கள் மட்டுமின்றி வர இயலாமல் வீட்டில் இருப்பவர்களும் அறுசுவை உணவை சாப்பிட வேண்டும் என்று நினைத்த தமிழரின் பண்பாட்டை மறையாமல் காப்பது அவசியமே. இதனால் சுற்றமும் உறவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்