முருங்கை சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலகளவில் நல்ல சந்தை
முருங்கை சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலகளவில் நல்ல சந்தை தேவை அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.
மனிதனின் வயது, வாழ்நாளை நீட்டிக்கும் 'மேஜிக்'கை வைத்திருக்கும் உணவு பொருட்களில் மிக முக்கியமானதாக இருப்பது முருங்கைதான். இந்த முருங்கை சார்ந்த பொருட்களின் தேவைக்கான மார்க்கெட்டை பூர்த்தி செய்யும் ஒரே இடம் நம்முடைய தமிழ்நாடு என்பது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. நாடு முழுவதற்குமான ஒட்டு மொத்த தேவையில் 65 சதவீதத்தை தமிழ்நாடு தான் பூர்த்தி செய்கிறது. ஆனால் இதன் மகத்துவத்தை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் 2 லட்சத்து 84 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் அதிகபட்சமாக சின்ன வெங்காயமும், அதற்கடுத்தபடியாக தக்காளி மற்றும் கத்தரிக்காய் இருக்கிறது. அந்த வரிசையில் 4-வது இடத்தில், அதாவது 21 ஆயிரத்து 501 ஹெக்டேர் பரப்பில் தமிழ்நாட்டில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது.
ஏற்றுமதி மண்டலம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 5 ஆயிரத்து 623 ஹெக்டேர் பரப்பிலும், அதனை தொடர்ந்து, கரூர் (3,080), தேனி (2,936), திருப்பூர் (2,090), தூத்துக்குடி (1,842) மாவட்டங்களிலும் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், முருங்கை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், மதுரை, தேனி, தூத்துக்குடி என 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஏற்றுமதி மண்டலமாகவும் அரசு அறிவித்துள்ளது.
நம் அனைவருக்கும் முருங்கை என்றால், அந்த மரத்தில் இருந்து கிடைக்கும் முருங்கைக்காய் மட்டுமே நமக்கு பெரிய விஷயமாக தெரிகிறது. ஆனால் அதில் இருந்து கிடைக்கும் விதைகள், இலைகள், காய்கள் என அனைத்திலும் இருந்து பெறப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலக அளவில் சந்தை தேவை அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.
பரிசு
முருங்கைக்காயை தவிர, இலைகள், விதைகள் மூலம் உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள், மருந்துகள் என பல்வேறு விஷயங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் இன்றளவும் முருங்கை சோப்புக்கு கடும் கிராக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஒரு நிறுவனம் முருங்கை சார்ந்த பொருட்களில் சாக்லேட் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதற்கான முருங்கை பொருட்கள் இங்கிருந்து தான் செல்கிறது.
இதுதவிர, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா நாடுகள் உள்பட வெளிநாடுகளில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் முருங்கைக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல், தோல் வியாதி சம்பந்தப்பட்டவைகளுக்கு நலம் தரும் மருந்தாக, முருங்கை சார்ந்த பொருட்களில் தயாரிக்கப்படும் ஆயிலுக்கு கிராக்கி இருக்கிறது. பழங்காலத்தில் தென் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர்களுக்கு முருங்கை ஆயில் பரிசாக அளிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
கோரிக்கை
இப்படியாக உணவாக, ஊட்டச்சத்து மருந்தாக, அழகுசாதன பொருட்களாக, விலங்குகளுக்கு தீவனமாக முருங்கை சார்ந்த பொருட்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. மேலும் உயிர் எரிபொருளுக்கும் அதில் சாத்தியம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்குள் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள முருங்கைக்கான சந்தை உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு மகத்துவத்தை கொண்ட முருங்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களில், 70 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் இந்த முருங்கை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து, அதனை உணவுத்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு நேரடியாகவும், தொடர்ச்சியாகவும் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனை ஈடுசெய்யவும், முருங்கை வர்த்தகத்தில் தமிழ்நாடு நிலையான இடத்தை பிடிப்பதற்கும் விவசாயிகளுக்கு தற்போது நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிகரிக்க செய்ய வேண்டும் என்பது முருங்கை சார்ந்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் எவை?
முருங்கையில் இருந்து பெறப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விவரம் வருமாறு:-
முருங்கை சோப்பு, எண்ணெய், மஞ்சள் கிரீம், சூப், சாக்கோ பார், மசாலா பொருட்களுடன் முருங்கைத் தூள், சர்க்கரை வியாதிகளுக்கு மாத்திரை, கர்ப்பிணிகளுக்கான மாத்திரை, முருங்கை லேகியம், முருங்கை டீ, பேஸ் வாஷ் கிரீம், ஷாம்பூ, முருங்கை தேன், நெய், முருங்கை பிரியாணி பொடி, முருங்கை சாம்பார் பொடி, முருங்கை இலை இட்லி பொடி, முருங்கை சாதப் பொடி, முருங்கை ஐஸ் கிரீம். இதுமட்டுமல்லாமல், பல்வேறு விதமான அழகு சாதன பொருட்களிலும் மூலப் பொருட்களாக முருங்கை சார்ந்த பொருட்கள் இடம்பெறுகின்றன.