இன்று 100-வது பிறந்தநாள்: தெலுங்கு ரசிகர்கள் மனதில் கடவுளாக வாழும் என்.டி.ராமராவ்

இன்று (மே 28-ந்தேதி) நடிகர் என்.டி.ராமராவ்வின் பிறந்தநாள். தமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர். என்றால், ஆந்திராவுக்கு ஒரு என்.டி.ஆர். இருவருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தவர்கள்.;

Update: 2023-05-28 11:50 GMT

எம்.ஜி.ஆர். ஏழை பங்காளனாகவும், ஆபத்பாந்தவனாகவும், அநீதியை எதிர்த்து போராடும் தலைவனாகவும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் என்றால்; என்.டி.ராமராவ் ராமராகவும், கிருஷ்ணராகவும் நடித்து தெலுங்கு மக்கள் மனதில் தெய்வமாக வாழ்ந்தார்.

பல சுவாரசியமான திருப்பங்களையும், பரபரப்புகளையும் கொண்டது என்.டி.ராமராவின் வாழ்க்கை.

1923-ம் ஆண்டு மே 28-ந்தேதி அப்போதைய சென்னை மாகாணத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் (தற்போது ஆந்திராவில் உள்ளது) உள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்த என்.டி.ராமராவ் குண்டூரில் உள்ள ஆந்திர கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். பின்னர் அந்த மாவட்டத்தில் உள்ள பிரதிபாடு என்ற ஊரில் சார்பதிவாளராக பணியாற்றினார்.

என்.டி.ராமராவ் கம்பீரமான தோற்றம் கொண்டவர் என்பதால், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதன் முதலாக 1949-ம் ஆண்டு டைரக்டர் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 'மனதேசம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தார்.

என்.டி.ராமராவ் ராமர் வேடத்தில் நடித்த 'சம்பூர்ண ராமாயணம்' அவருக்கு பேரும் புகழையும் தேடித்தந்தது. அமைதி தவழும் சாந்தமான முகமும் மென்மையான பேச்சும் என்.டி.ராமராவை ராமராகவே நினைத்து வணங்கும் அளவுக்கு அவரை மக்கள் மனதில் நிலைநிறுத்தியது. இதேபோல் அவர் கிருஷ்ணர் வேடம் தரித்தால் அங்கு கிருஷ்ணர்தான் தெரிவாரே தவிர என்.டி.ராமராவை பார்க்க முடியாது.

'கர்ணன்' படத்தில் கிருஷ்ணராக நடித்துள்ள அவர், தேர் சக்கரத்தின் கீழ் வீழ்ந்து கிடக்கும் சிவாஜியிடம் யாசகம் கேட்டு வரும் போது பாடும், ''உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா'' என்ற உயிரை உருக்கும் பாடல் காலத்தால் அழியாதது. அந்த படத்தில் அவர் குந்திதேவியிடம், 'அத்தே', 'அத்தே' என்று பேசும் வசனம் மிகவும் ரசிக்கத்தக்கது.

என்.டி.ராமராவ் கடவுள் பாத்திரங்களில் மட்டுமின்றி வரலாற்று நாயகர்களின் கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். ராமராக நடித்த அவர் ராவணனாகவும் நடித்துள்ளார். பீமன், அர்ஜூனன், துரியோதனன் பாத்திரங்களிலும் தனது முத்திரையை பதித்து இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் புராண மற்றும் சரித்திர படங்களில் நடித்த என்.டி.ராமராவ் பின்னர் அதிக அளவில் சமூக படங்களில் நடித்தார். 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்று இருக்கிறார். 'பாதாள பைரவி', 'ஸ்ரீகிருஷ்ணார்ஜூன யுத்தம்', 'தான வீர சூர கர்ணா' 'ராமுடு பீமுடு' போன்ற படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தன. 'ராமுடு பீமுடு'தான் தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் 'எங்க வீட்டுப் பிள்ளை' ஆனது.

என்.டி.ராமராவின் திரையுலக வாழ்க்கையின் பெரும்பகுதி சென்னையிலேயே கழிந்தது. அப்போதெல்லாம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஆந்திர பக்தர்கள் அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு வருவார்கள். இதனால் அவரது வீட்டின் முன் எப்போதும் கூட்டமாகவே இருக்கும்.

எம்.ஜி.ஆரை தனது அண்ணனாகவே பாவித்த என்.டி.ராமராவ், அவரை தனது குரு என்றும் வழிகாட்டி என்றும் கூறுவார். தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய காலகட்டத்தில், 1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி தெலுங்கு தேசம் என்ற கட்சியை என்.டி.ராமராவ் தொடங்கினார். இது தொடர்பாக சென்னையில் அவர் எம்.ஜி.ஆரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரசுக்கு எதிராக கட்சி தொடங்கிய அவர் அடுத்த ஆண்டே ஆட்சியை பிடித்தார். பின்னர் நடந்த அரசியல் சதியால் ஆட்சியை இழந்த அவர், மக்களின் பேராதரவுடன் 1985-ல் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். மூன்று முறை ஆந்திர முதல்-மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார்.

சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்த்தவர் என்ற பெருமை என்.டி.ராமராவுக்கு உண்டு, அவர் ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த போதுதான், கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் 'தெலுங்கு கங்கை திட்டம்' கொண்டுவரப்பட்டது. இதற்கான தொடக்க விழா 1983-ம் ஆண்டு மே 25-ந்தேதி சென்னையில் நடந்தது. இதில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ராமராவ் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

1984-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக என்.டி.ராமராவ் பிரசாரம் செய்தார்.

தேசிய அரசியலிலும் என்.டி.ராமராவ் ஆர்வம் காட்டினார். 1989-ல் காங்கிரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டி தேசிய முன்னணியை உருவாக்கியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த கூட்டணி ஓராண்டு ஆட்சியில் இருந்தது.

1943-ம் ஆண்டு தனது 20-வது வயதில் என்.டி.ராமராவ் தனது தாய்மாமன் மகளான பசவராம தாரகம் என்பவரை மணந்தார். மனைவி பவசராம தாரகம் 1985-ல் மரணம் அடைந்தார்.

இந்த தம்பதிக்கு 8 மகன்கள். 4 மகள்கள், இவரது 3-வது மகள் புவனேஸ்வரியை சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார். மற்றொரு மகளான புரந்தேஸ்வரி காங்கிரஸ் எம்.பி.யாகவும் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.

1993-ம் ஆண்டு லட்சுமி பார்வதி என்பவரை என்.டி.ராமராவ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தெலுங்கு எழுத்தாளரான லட்சுமி பார்வதி என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக வந்த போது ஏற்பட்ட நட்பு நெருக்கமாகி திருமணத்தில் முடிந்தது. இந்த திருமணம் என்.டி.ராமராவ் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்.டி.ராமராவ் 1996-ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி தனது 72-வது வயதில் ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது அஸ்தியை லட்சுமி பார்வதி 8 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2004-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றில் கரைத்தார்.

என்.டி.ராமராவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நூறாவது பிறந்தநாள். ஆம்... இது அவரது நூற்றாண்டு விழா. அத்துடன் அவர் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி 41 ஆண்டுகள் ஆகின்றன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் என்.டி.ராமராவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

என்.டி.ராமராவ் இன்று இல்லை என்றாலும், தெலுங்கு மக்கள் மனதில் அவர் இன்னும் ராமராகவும், கிருஷ்ணராகவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்