பால் தரும் பசுக்களுக்கு சரிவிகித தீவன முறை

பால் தரும் பசுக்களை பராமரிக்கும் போது தரமான தீவனங்களை சரியான அளவில் அளித்து வந்தால் போதிய பால் உற்பத்தி கிடைக்கும்.

Update: 2023-06-01 10:36 GMT

பசுந்தீவனம் மற்றும் புரதம்

கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 கிலோ அளவுக்கு பசுந்தீவனங்கள் அளிக்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட புதிய பசுந்தீவனங்களில் 60 முதல் 65 சதவீத அளவுக்கு செரிமான சத்துகள் அடங்கியுள்ளன. தட்டை பயிறு, வேலிமசால், குதிரைமசால் போன்றவற்றில் அதிக புரதச்சத்து இருப்பதால் பால் உற்பத்தி அதிகரிக்கும். அதே போல், அசோலாவில் அதிக புரதச்சத்து உள்ளது. இதனை நாளொன்றுக்கு ஒரு மாட்டுக்கு 1 முதல் 2 கிலோ அளவுக்கு கொடுக்கலாம்.

அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம்

ஒரு கிலோ அடர்தீவனம் 10 கிலோ புல்லுக்கு சமமானது. ஆனால், பால் மாடுகளுக்கான தீவனத்தில் வெறும் அடர்தீவனத்தை மட்டும் அளித்தால் பால் உற்பத்தி குறையும். அடர் தீவனத்தில் அளவை கன்று ஈனுவதற்கு 2 மாதத்திற்கு முன்பிருந்து சற்று கூடுதலாக கொடுக்க வேண்டும். கன்று ஈனும் கடைசி 2 மாதங்களில் சினை மாட்டின் எடை தினமும் ஒன்றரை கிலோ அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடர்தீவனத்தை போலவே மாடுகளுக்கு உலர் தீவனங்களான வைக்கோல், சோள தட்டை போன்றவற்றையும் அன்றாட தீவனத்தில் கட்டாயம் இடம் பெற செய்ய வேண்டும்.

தாது உப்பு

கறவை மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தில் தாது உப்பு கலவையை அளிக்க வேண்டும். தாது உப்பில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கந்தகம், இரும்பு உள்ளிட்ட சத்துகள் சரியான அளவில் இருக்க வேண்டும். இதனை தினமும் 50 கிராம் அளவிற்கு அல்லது 2 சதவீதம் அளவிற்கு கலப்பு தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். கிடேரிகளுக்கு 30 கிராம் என்ற அளவில் தினமும் கொடுத்து வர வேண்டும்.

குடிநீர்

கறவை மாடுகளுக்கு எப்போதும் சுத்தமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் வைக்கும் தொட்டியை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. நிழலான இடத்தில் வைத்து அதில் சுத்தமான குடிநீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும். மாடுகளின் உடலில் நீரின் அளவு குறைந்தால் பால் உற்பத்தியும் குறையும்.

சரிவிகித தீவன பலன்கள்

பசு மாடுகளை அவற்றின் இளம் பருவத்தில் இருந்தே அதற்குத் தேவையான சரிவிகித ஊட்டச்சத்து உணவை அளிப்பதால் கன்று பருவத்தில் இருந்து மாடுகளின் வளர்ச்சி சீராக அமையும். எனவே, கால்நடை பண்ணையாளர்கள் மாடுகளின் தீவனத்தில் பசுந்தீவனம், புரதம், அடர் தீவனம், உலர் தீவனம் மற்றும் தாது உப்புகள் போன்றவை தேவையான அளவில் இருக்கும்படி பார்த்து கொள்வது அவசியம். இதன் மூலம் ஆரோக்கியமான பசுக்களை, நல்ல தரமான பால் உற்பத்தியையும் பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்