ஆண்கள் நுழைந்தால் அபராதம்.. 12 மலை கிராம பெண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா

பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்தும், பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து 2 பெண் குழந்தைகளை தெய்வமாக பாவித்து சடங்கு நடத்தி வழிபட்டனர்.

Update: 2024-07-01 05:27 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக காளியம்மன் திருவிழாவை 12 கிராம மலைவாழ் மக்களுடன் இணைந்து நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா சமீபத்தில் தொடங்கியது. மலைவாழ் மக்கள், காளியம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர் சீதனம் கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டனர்.

இதில் சிறப்பம்சமாக 12 கிராமங்களை சேர்ந்த ஆண்களுக்காக 3 நாட்களும், பெண்களுக்கு என்று கடைசியாக ஒரு நாளும் திருவிழா நடைபெறுகிறது. அவ்வகையில் பெண்களுக்கு மட்டுமான விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் விடியற்காலை 5 மணிக்கு ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடவுளுக்கு உகந்த இடம் என நம்பும் குளத்தில் குளித்துவிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதைத்தொடர்ந்து கையில் கட்டைகளால் ஆன கத்திகளை ஏந்திக்கொண்டு பாட்டு பாடியபடி கிராமத்திற்கு வந்தனர். பின்னர் பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்தும், பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து 2 பெண் குழந்தைகளை தெய்வமாக பாவித்து சடங்கு நடத்தி வழிபட்டனர். பெண்களுக்கான இந்த திருவிழா நிகழ்ச்சியில் ஆண்கள் யாரும் பங்கேற்கக்கூடாது. அப்படி பங்கேற்றால் அருள் வந்து ஆடும் பெண்கள், அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பது இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும், அத்துமீறி உள்ளே வரும் ஆண்களுக்கு ரூ 5 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்