நாளை கால பைரவர் ஜெயந்தி: வழிபாடு மற்றும் பலன்கள்

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமி திதி கால பைரவருக்குரிய முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது.

Update: 2024-11-22 07:41 GMT

சிவபெருமானின் 64 வடிவங்களில் முதன்மையான உக்கிரமான வடிவமாக கால பைரவர் கருதப்படுகிறார். கால பைரவரை வழிபாடு செய்தால், எதிரிகள் குறித்த பயம் விலகுவதோடு, மன தைரியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமி திதி கால பைரவருக்குரிய முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. வளர்பிறை அஷ்டமியை விட, தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து கால பைரவரை வழிபடுபவர்களே அதிகம்.

கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவர் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த தினத்தை கால பைரவர் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு கால பைரவர் ஜெயந்தி அல்லது பைரவாஷ்டமி நாளை (23.11.2024 சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று (22.11.2024) இரவு 10.31 மணிக்கு தொடங்கி, நாளை (23.11.2024) இரவு 11.45 மணி வரை அஷ்டமி திதி உள்ளது.

கால பைரவர் ஜெயந்தி நாளில் விரதமிருந்து கால பைரவரை வழிபடுவதால் பாவங்கள், பயம், தடைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை. விரதம் இருப்பவர்கள், நாளை அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, கால பைரவர் படம் அல்லது வீட்டில் உள்ள சிவ பெருமானின் படத்திற்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடலாம். இனிப்புகள், மிளகு சேர்த்த வடை ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கால பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

கால பைரவரின் வாகனமாக நாய் இருப்பதால், ஒருசில பகுதிகளில் பக்தர்கள் நாய்களுக்கு பால் மற்றும் இனிப்புகளை உணவாக கொடுத்து மகிழ்கிறார்கள். கோவில்களில் மாலை நேரத்தில் நடைபெறும் ஷோடசஉபச்சார பூஜையில் பங்கேற்பதும் வழக்கமாக உள்ளது.

அஷ்டமி நாளில், எந்தக் காரியம் செய்யாவிட்டாலும் பைரவரை வழிபடுவது நல்லது. கால பைரவரை வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் அனைத்தும் தெறித்து ஓடிவிடும், தொடங்கிய செயல்கள் வெற்றியடையும், எதிரிகள் குறித்த பயம் விலகும், எதிரிகள் வீரியம் இழந்து போவார்கள் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்த நாளில் கால பைரவர் அஷ்டகத்தை பாடி வழிபடுவதால் கால பைரவரின் பரிபூரண அருள் கிடைக்கும்.  

Tags:    

மேலும் செய்திகள்